சேலம் | தேடப்பட்டுவந்த குற்றவாளி நள்ளிரவில் நடுரோட்டில் வெட்டிக்கொலை – காவல்துறையினர் தீவிர விசாரணை!

சேலம் சங்ககிரி அருகே முன்விரோதம் காரணமாக போலீசாரல் தேடப்பட்ட குற்றவாளி மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். சேலம் மாவட்டம், சங்ககிரியில் வாணியர் காலணியைச் சேர்ந்தவர் யமஹா மூர்த்தி (எ)…

The incident of slashing by mysterious persons in the middle of the road - has caused a lot of killing in the area

சேலம் சங்ககிரி அருகே முன்விரோதம் காரணமாக போலீசாரல் தேடப்பட்ட குற்றவாளி மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

சேலம் மாவட்டம், சங்ககிரியில் வாணியர் காலணியைச் சேர்ந்தவர் யமஹா மூர்த்தி (எ) மூர்த்தி (45). இவருக்கும் வேலம்மாவலசு பகுதியைச் சேர்ந்த கனகராஜ் என்பவருக்கும் இடையே கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த அக்டோபர் 13-ம் தேதி மூர்த்தி தனது நண்பரான சங்ககிரி ஆர்.எஸ்.பகுதியைச் சேர்ந்த அசோக்குமார் (29) என்பவரிடம் சென்று கனகராஜ் தனது குடும்பத்தைத் தவறாக ஊருக்குள் பேசி வருவதாகக் கூறியுள்ளார்.

அதனையடுத்து அசோக்குமார் கனகராஜுக்கு போன் செய்து, “உன்னிடம் பேச வேண்டும் உடனே சின்னாக்கவுண்டனூர் ஐயப்பன் கோயில் அருகே உள்ள பகுதிக்கு வா” எனக் கூறியுள்ளார். உடனே கனகராஜ் அவரது நண்பர் சரவணனுடன் அந்த பகுதிக்குச் சென்றுள்ளார். அப்போது மூர்த்தி, அசோக்குமார் ஆகிய இருவரும் கனகராஜைக் கெட்ட வார்த்தையில் திட்டி, அடித்து கீழே தள்ளியுள்ளனர். அதனையடுத்து மூர்த்தி, கனகராஜின் கைகளைப் பின்புறம் பிடித்துக் கொண்டு அசோக்குமாரை அறிவாளால் வெட்டும்படி கூறியுள்ளார். அப்போது அசோக்குமார் கையில் வைத்திருந்த அருவாளால் கனகராஜை வெட்ட வந்தபோது கனகராஜின் நண்பர் சரவணன் அசோக்குமாரை தடுத்துள்ளார்.

அப்போது அசோக்குமார் சரவணனைப் பார்த்து யாரடா நீ அவனைக் காப்பாற்றுவதற்கு முதல்ல நீ சாவுடா என்று சொல்லி அறிவாளால் சரவணனின் கழுத்தைப் பார்த்து வெட்ட முயன்ற போது உடனே சரவணன் கையால் தடுத்துள்ளார். அதில் சரவணனின் கையின் மோதிர விரலில் வெட்டுப்பட்டு விரல் துண்டாகத் தொங்கியது. அப்போது மூர்த்தி, அசோக்குமார் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

ஆபத்தான நிலையிலிருந்த சரவணனை, கனகராஜ் இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று சங்ககிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளார். இதுகுறித்து சரவணன் சங்ககிரி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து அசோக்குமாரை கைது செய்தனர். இதில் தலைமறைவான மூர்த்தியை தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று (டிச. 14) நள்ளிரவு சங்ககிரி பழைய ஏடிசி டிப்போ பேருந்து நிருத்தம் அருகே மர்ம நபர்கள் மூர்த்தியைத் துரத்தி வந்து சின்னாக்கவுண்டனூர் சாலையில் அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சங்ககிரி டிஎஸ்பி ராஜா தலைமையிலான காவல்துறையினர் கொலை செய்யப்பட்ட மூர்த்தியின் சடலத்தைக் கைப்பற்றி சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஏற்கனவே கனகராஜுக்கும், மூர்த்திக்கும் முன் விரோதம் இருந்து வந்ததால் இதன் காரணமாக மூர்த்தி கொலை செய்யப்பட்டு இருக்கலாம் எனச் சந்தேகித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். சங்ககிரியில் நள்ளிரவு நேரத்தில் காவல்துறையால் தேடப்பட்டு வந்த குற்றவாளி அறிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் சங்ககிரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.