முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம் செய்திகள் Instagram News

தீண்டாமையின் உச்சம்; குடிநீரில் மலம் கலந்த கொடூரம் – இருவர் மீது வழக்குப்பதிவு

புதுக்கோட்டையில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர்த் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் நேரடியாக சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

சிறார்களுக்கு உடல்நலக் குறைவு

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் முத்துக்காடு பஞ்சாயத்து இறையூர் அருகே உள்ள வேங்கைவயல் ஆதிதிராவிடர் காலணியில், 25க்கும் மேற்பட்ட பட்டியலின குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், சமீப காலமாக அங்குள்ள சிறுவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து ஒவ்வொருவராக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து, அவர்கள் பயன்படுத்தும் குடிநீரில் ஏதோ கலந்திருப்பதாக, சிறுவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

குடிநீரில் மலம் கலந்த கொடுமை

இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏறி பார்த்தனர். அப்போது அதில் மலம் கலந்திருப்பது தெரியவந்தது. உடனடியாக கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருக்கும், ஊராட்சி நிர்வாகத்திற்கும் தகவல் அளித்தனர். அதன்பேரில், அன்னவாசல் வட்டாட்சியர் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் உடனடியாக அங்கு சென்று, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஆய்வு மேற்கொண்டனர். மலம் கலந்திருப்பதை உறுதி செய்த அதிகாரிகள், தொட்டியில் உள்ள நீரை அப்புறப்படுத்தி, கிருமி நாசினிகள் கொண்டு தூய்மைப்படுத்தினர். மேலும் மருத்துவ முகாமும் நடத்தப்பட்டது.

இதையடுத்து, தங்களை யாரோ அவமரியாதை செய்ய வேண்டும் என்ற நோக்கில் தாங்கள் பயன்படுத்தும் குடிநீரில் மலத்தை கலந்து சென்றுள்ளதாக தெரிவித்த அப்பகுதி மக்கள், குற்றவாளிகளைக் கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.

காங்கிரஸ் புகார் 

மேலும் இந்த சம்பவம் குறித்து ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழு  தலைவருமான செல்வப்பெருந்தகை தனது ட்விட்டர் பக்கத்தில், புதுக்கோட்டை வேங்கைவயல் பகுதியில் வசிக்கும் பட்டியல் சமூக மக்கள் பயன்படுத்தும் குடிநீரில் சமூக விரோத மனப்பான்மை கொண்ட சிலர் மலத்தை கலந்திருக்கும் செய்தி வேதனை அளிப்பதாக பதிவிட்டுள்ள அவர், எதிர்காலத்தில் இதுபோன்ற அநாகரீக செயல்கள் நடக்காமல் இருப்பதற்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த சமுக விரோத தீய சக்திகளை இரும்புக்கரம் கொண்டு அடக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

மாவட்ட ஆட்சியர் விரைந்து நடவடிக்கை

இதனை அடுத்து, இன்று இச்சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே மற்றும் அரசு அலுவலர்கள், வேங்கைவயல் கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டனர். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு, கிராம மக்களிடையே விசாரணை மேற்கொண்டார். அப்போது, தங்களது கிராமத்தில் அடிப்படை வசதிகள் எதுவும் இதுவரை கிடைக்கப் பெறவில்லை என்றும், தொடர்ந்து தீண்டாமை கடைபிடிக்கப்பட்டு வருகிறது என்றும் கிராம மக்கள் தெரிவித்தனர். மேலும், கிராமத்தில் உள்ள டீக்கடைகளில் இரு குவளை முறையில் தங்களுக்கு தேநீர் வழங்கப்படுவதாகவும், கோவிலுக்குள் சென்று வழிபட அனுமதி மறுக்கப்படுவதாகவும் தெரிவித்தனர்.

கோயிலுக்குள் சென்ற பட்டியலின மக்கள்

அனைத்தையும் விசாரித்த பின்னர், கிராமத்தில் உள்ள டீக்கடையில் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது அந்த கடையில் இரட்டைக் குவளை முறை கடைபிடிக்கப்பட்டது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அங்குள்ள கோயிலில் பட்டியலின மக்கள் வழிபாடு செய்ய மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை மேற்கொண்டார்.  உடனடியாக அங்கிருந்த அதிகாரிகள், அப்பகுதி பட்டியலின மக்களை  கோயிலுக்குள் அழைத்துச் சென்று வழிபடச் சென்றனர். அப்போது அவர்கள் வழிபட்டுக் கொண்டிருக்கும் பொழுது,  பெண் ஒருவர் திடீரென்று சாமியாடி, பட்டியலின மக்களைப் பார்த்து கோவிலுக்குள் ஏன் வந்தாய் என்று கேட்டதால் மாவட்ட ஆட்சியரும், உயர் அதிகாரிகளும் அதிர்ச்சி அடைந்தனர்.

இருவர் மீது நடவடிக்கை

இதையடுத்து சாமி ஆடிய பெண் மீதும், இரு குவளை முறையை பயன்படுத்திய டீக்கடை உரிமையாளர் மீதும், எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வருவாய்த் துறையினர் மற்றும் காவல்துறையினருக்கு ஆட்சியர் கவிதா ராமு உத்தரவு பிறப்பித்தார். மேலும் இச்சம்பவம் குறித்து வருவாய்த்துறையினர் மற்றும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு, விரிவான அறிக்கையை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.

– ராஜ்குமார், செய்தியாளர், புதுக்கோட்டை 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

என்ன செய்ய காத்திருக்கிறது பாமக 2.0 – அன்புமணி விளக்கம்

EZHILARASAN D

பெரும்பாலான பெண்கள் Zoom வீடியோ ஆப்ஷனை தவிர்ப்பது ஏன்?

Jayapriya

கோவை கார் வெடிப்பு சம்பவம்; என்ஐஏ விசாரணை தொடக்கம்

G SaravanaKumar