மக்களுக்கு என்ன தேவை என்ற சிந்தனையே இல்லாத ஆட்சி தான் நடக்கிறது..! எடப்பாடி பழனிசாமி

திமுக ஆட்சிக்கு வந்து 24 மாதங்கள் ஆகியும் எடப்பாடி தொகுதியில் துரும்பை கூட கிள்ளி போடவில்லை எனவும், மக்களுக்கு என்ன தேவை என்ற சிந்தனையே இல்லாத ஆட்சி தான் தமிழகத்தில் நடந்து வருவதாகவும் அதிமுக…

திமுக ஆட்சிக்கு வந்து 24 மாதங்கள் ஆகியும் எடப்பாடி தொகுதியில் துரும்பை கூட கிள்ளி போடவில்லை எனவும், மக்களுக்கு என்ன தேவை என்ற சிந்தனையே இல்லாத ஆட்சி தான் தமிழகத்தில் நடந்து வருவதாகவும் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

அதிமுகவின் பொதுச் செயலாளராக பதவியேற்ற பின்பு முதல் முறையாக, எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொங்கணாபுரம் பகுதிக்கு பொதுமக்களின் குறைகளை கேட்பதற்கும், மனுக்களை பெறுவதற்கும் அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி வருகை தந்தார். அப்போது அங்கு அவருக்கு அப்பகுதி அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் சீர்வரிசைகளுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

நிகழ்ச்சி முடிந்த பிறகு எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், அதிமுக ஜனநாயக ரீதியாக உள்ள கட்சி. சாதாரண தொண்டர் கூட உயர்ந்த பதவியான பொதுச் செயலாளர் என்ற பதவிக்கு வர முடியும்.1989இல் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். அதிமுகவில் ஜெயலலிதா பல்வேறு பொறுப்புகளை கொடுத்து எடப்பாடி தொகுதிக்கு பெருமை சேர்த்தார்கள். நெடுஞ்சாலைத்துறையில் ஐந்து ஆண்டு காலம் சிறப்பாக பணியாற்றியதால், இந்தியாவிலேயே சிறந்த தார்சாலை உள்ள மாநிலமாக தமிழகம் தேர்வு செய்யப்பட்டது.

நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை என இரண்டு பெருந்துறைகளை கொடுத்து இரண்டு துறைகள் மூலமாக சிறப்பான சாலைகள், பாலங்கள் உள்ளிட்டவைகள் அமைத்து கொடுக்கப்பட்டது. மேலும் விவசாயிகளின் கோரிக்கையான நூறு ஏரிகள் நிரப்பும் திட்டமும் கொண்டு கொண்டுவரப்பட்டது. ஆட்சி மாற்றத்திற்கு பிறகு அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. தமிழக சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்தும் , பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. அதிமுக ஆட்சியில் இருந்திருந்தால் 100 ஏரிகளிலும் தண்ணீர் நிரம்பி காட்சியளித்திருக்கும்.

எடப்பாடி சட்டமன்ற தொகுதி பின் தங்கிய தொகுதி. மக்களின் கோரிக்கையை ஏற்று அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டி கொடுக்கப்பட்டது. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு எடப்பாடி தொகுதியில் துரும்பை கூட கிள்ளி போடவில்லை. இந்த தொகுதிக்காக ஒரு சிறிய வேலையை கூட இதுவரை செய்யவில்லை. சேலம் மாவட்டத்தில் உள்ள பகுதியில் எந்த பணிகளும் நடைபெறவில்லை

தமிழக முழுவதும் ஆட்சி பொறுப்பேற்று 24 மாதங்கள் ஆகியும், எந்த புதிய பணியும் மேற்கொள்ளப்பட்டதாக தெரியவில்லை. பெயருக்கு ஆங்காங்க சிறிய சிறிய பணிகளை செய்து விட்டு, தேர்தல் வாக்குறுதியில் கொடுத்த திட்டங்கள் நிறைவேற்றி விட்டதாக திமுக கொக்கரித்து வருகிறது. தமிழகத்தில் சட்ட ஒழுங்குப் பிரச்சினை அதிகரித்துள்ளது. கொலை, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்கள் அதிகம் நடைபெற்று வருகிறது. தினசரி சர்வசாதாரணமாக ஆறு,ஏழு கொலைகள் நடைபெற்று வருகிறது. தமிழகம் கொலைகளமாக மாறி வருகிறது.

விளையாட்டு மைதானம், திருமண மண்டபம் ஆகியவற்றில் மதுபானங்கள் விற்கலாம் என்று சொல்கிறார்கள். கொள்ளையடித்த பணம் பத்தவில்லை போலும். ஏற்கனவே திமுக ஆட்சி சந்திசிரித்து வருகிறது. அதிமுக ஆட்சி காலத்தில் குறிப்பிட்ட காலத்தில் மட்டுமே மதுபானங்கள் விற்கப்பட்டது. தற்பொழுது 24 மணி நேரமும் மதுபான கடைகள் செயல்பட்டு வருகிறது. எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், தமிழகத்தில் மட்டும்தான் விசித்திரமாக அரசியல் நடைபெற்று வருகிறது. மாணவர்கள் போதைக்கு அடிமையாகி சீரழிந்துகொண்டு வரும் நிலையில் திருமணமண்டபம், விளையாட்டு மைதானம் ஆகியவற்றில் மது விற்பனை செய்யலாம் என்று கூறுகிறார்கள். இப்படிப்பட்ட முதலமைச்சர் நாட்டை ஆளுகிறார்கள் என்று வேதனையாக உள்ளது.

தமிழகத்தில் எல்லாம் துறைகளிலும் ஊழல், லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள நிதியமைச்சர் பேசும் ஆடியோ வெளியானது. இதுதொடர்பாக அறிக்கை விடப்பட்டது. இதற்கு முதலமைச்சர் மறுப்பு தெரிவிக்கவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளில் 30 ஆயிரம் கோடி மோசடி செய்த ஆட்சி திமுக ஆட்சி தான். மக்களுக்கு சேரவேண்டிய திட்டங்களுக்கான பணங்கள் எல்லாம் வெளியே சென்றுவிட்டதால் எந்த பணிகள் நடைபெறாமல் உள்ளது. நாட்டு மக்களுக்கு என்ன தேவை என்ற சிந்தனையே இல்லாத ஆட்சி நடக்கிறது என்பது வெட்கப்பட வேண்டிய விஷயம்.

எங்கு பார்த்தாலும் கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளது.இதுகுறித்து சட்டமன்றத்தில் பேசியும் எதுவும் தடுக்கப்படவில்லை. செவிடன் காதில் ஊதிய சங்கு போன்று உள்ளது. கும்பகர்ணன் போன்று தூக்கத்திலிருக்கும் திமுக ஆட்சி, விழித்துக்கொண்டு செயல்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். மேலும் முதியோர் உதவித்தொகை முறையாக வழங்க வேண்டும். ஏழை எளிய மக்களை வாட்டி வதைக்கின்ற அரசு திமுகவாக மட்டும்தான் இருக்க முடியும் என்று குற்றம்சாட்டினார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.