“தி.மு.க. மேகதாது விவகாரத்தில் அரசியல் ஆதாயம் தேடுகிறது!” – மாணிக்கம் தாகூர்

ஆட்சியை இழந்ததை சகித்துக் கொள்ள முடியாத தி.மு.க. மேகதாது பிரச்சினையில் அரசியல் ஆதாயம் தேட முற்படுகிறது என்று மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாரு காங்கிரஸ் கமிட்டியின்ம் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் அறிக்கை ஒன்றை வெள்யிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது, “மத்திய நீர்வளத்துறை இணையமைச்சர் ராஜ்பூஷன் நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போது, கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்ற தீர்ப்பில் எந்த தடையும் இல்லை என்று பேசியது தமிழகத்தில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 5.2.2007 இல் காவிரி நடுவர்மன்றமும், 16.2.2018 இல் உச்சநீதிமன்றமும் வழங்கிய இறுதி தீர்ப்பின்படி காவிரி படுகை மாநிலங்களை பாதிக்கிற வகையில் எந்தவிதமான கட்டுமானப் பணிகளையும் கர்நாடக அரசு மேற்கொள்ளக் கூடாது என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் பா.ஜ.க. அமைச்சர் கர்நாடக அரசுக்கு ஆதரவாக பேசியிருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக அமைந்துள்ளது.

நடுவர்மன்றம், உச்சநீதிமன்றம் ஆகியவற்றின் மூலம் தமிழகம் போராடிப் பெற்ற உரிமைகளின் அடிப்படையில் ஆண்டுக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் வழங்கப்பட வேண்டும் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் எவ்வளவு வழங்க வேண்டுமென்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், கர்நாடக அரசு இந்த தீர்ப்பை ஏற்றுக் கொள்ள மறுப்பதோடு, வழங்க வேண்டிய தண்ணீர் மறுக்கப்படுவதால் காவிரி டெல்டா விவசாயிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள். இந்நிலையில் காவிரி நீரின் அளவை நிர்ணயிக்கும் பிலிகுண்டுலுவிற்க்கு 4 கி.மீ. தூரத்திற்கு மேலே கிருஷ்ணராஜசாகர் அணைக்கு கீழே ரூபாய் 9000 கோடி செலவில் 67.15 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட அணையை மேகதாதுவில் கட்ட கர்நாடக அரசு முயற்சி செய்வதை தமிழ்நாடு எந்த நிலையிலும் ஏற்றுக் கொள்ளாது. மேகதாதுவில் அணை கட்டப்படுமேயானால், காவிரிப் படுகை வறண்ட பாலைவனமாக மாற வழிகோலும் என தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும், விவசாய சங்கங்களும் ஒருமித்த குரலில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிராக தமிழக அரசு 2018 இல் உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு நிலுவையில் இருக்கும் போது, 2019 நவம்பர் 22 ஆம் தேதி கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட விரிவான திட்ட அறிக்கையை மத்திய பா.ஜ.க. அரசிடம் சமர்ப்பித்தது. விரிவான திட்ட அறிக்கைக்கு அனுமதியும் வழங்கப்பட்டது. இது தமிழகத்திற்கு பாஜ.க. அரசு செய்த மிகப்பெரிய துரோகமாகும். இந்நிலையில், மேகதாதுவில் அணை கட்டுவதை தடுத்து நிறுத்துவதற்கு தமிழக அரசு சட்டரீதியாக அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிற சூழலில் த.வெ.க.வும், காங்கிரஸ் கட்சியும் இணைந்து தமிழகத்தின் நலன்களை தாரை வார்த்ததாக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பேசியிருப்பதை அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்ட செயலாகவே கருத வேண்டும். ஆட்சியை இழந்ததை சகித்துக் கொள்ள முடியாத நிலையிலுள்ள தி.மு.க. மேகதாது பிரச்சினையில் அரசியல் ஆதாயம் தேட முற்படுகிறது.

கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டக் கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில் நாடாளுமன்றத்தில் தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சியினர் உரிமைக்குரல் எழுப்பியிருக்கிறார்கள். தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் ஒட்டுமொத்த குரலாக ஒலித்து கர்நாடக அரசின் மேகதாது அணை கட்டும் திட்டத்தை முறியடிக்க ஓரணியில் திரள வேண்டுமே தவிர, பரஸ்பர குற்றச்சாட்டுக்களை எழுப்புவது தமிழகத்தின் நிலையை பலவீனப்படுத்தும்.

கர்நாடகத்தில் யார் ஆட்சி செய்தாலும் அவர்கள் எல்லோருமே தமிழ்நாட்டின் நலனுக்கு எதிராகவே தான் கடந்த காலங்களில் பேசியிருக்கிறார்கள், செயல்பட்டிருக்கிறார்கள். இந்நிலையில் மேகதாது பிரச்சினையில் அரசியல் சாயம் பூசுவதை தவிர்த்து தமிழக அரசு எடுக்கின்ற அனைத்து முயற்சிகளுக்கும் உறுதுணையாக இருப்பதே நமது உரிமையை மீட்டெடுப்பதற்கு உரிய வாய்ப்பாக அமையும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.