கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற கும்பல்..! திரைப்பட இயக்குனருக்கு தொடர்பிருப்பதாக அதிர்ச்சி வாக்குமூலம்!!

கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற கும்பல்… திரைப்பட இயக்குனருக்கு தொடர்பிருப்பதாக அதிர்ச்சி வாக்குமூலம்… கும்பல் சிக்கியது எப்படி…? அதிர்ச்சித் தகவல்களுடன் கூடிய செய்தி தொகுப்பை இங்கு காணலாம்… கள்ளநோட்டுகள் ஒரு நாட்டின் பொருளாதாரத்தை…

கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற கும்பல்… திரைப்பட இயக்குனருக்கு தொடர்பிருப்பதாக அதிர்ச்சி வாக்குமூலம்… கும்பல் சிக்கியது எப்படி…? அதிர்ச்சித் தகவல்களுடன் கூடிய செய்தி தொகுப்பை இங்கு காணலாம்…

கள்ளநோட்டுகள் ஒரு நாட்டின் பொருளாதாரத்தை பின்னடைவுக்கு தள்ளும் ஒரு வைரஸ். பணமதிப்பிழப்புக்கு பிறகு நாட்டில் கள்ள நோட்டுகள், கறுப்பு பணம் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விடும் என்று கூறப்பட்டது. ஆனால் அதன் பிறகு நாட்டில் கள்ளநோட்டுகள் புழக்கம் அதிகரித்து விட்டதாக சொல்கிறது அதிர்ச்சியளிக்கும் புள்ளி விவரங்கள்.

2022ஆம் நிதியாண்டில் இந்திய மதிப்பின் கள்ளநோட்டுகள் 10.7 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், ரூ. 500 கள்ள நோட்டுகள் 101.93 சதவீதம் மற்றும் ரூ. 2,000 கள்ள நோட்டுகள் 54 சதவீதம் உயர்ந்துள்ளதாகவும் ரிசர்வ் வங்கி அதிர்ச்சிகரமான புள்ளி விவரங்களை வெளியிட்டது. இந்த ஆண்டும் கள்ளநோட்டுக்கள் புழக்கம் அதிகரித்து விட்டதாக கூறப்படுகிறது. சட்டரீதியிலான நடவடிக்கைகளை காவல்துறை எடுத்தாலும் கூட கள்ளநோட்டுகள் புழக்கம் தொடர்ந்து கொண்டு தான் இருப்பது அதிர்ச்சியான ஒன்று.

கள்ளநோட்டுக்களை புழக்கத்தில் விட முயன்ற சம்பவம் திருச்சியை அடுத்த மணப்பாறை பகுதியில் நடந்துள்ளது. ரூ. 84 லட்சம் கள்ளநோட்டுகளுடன் கும்பலை போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மணப்பாறை பகுதியில் இருந்து கள்ள நோட்டுகளுடன் காரில் கும்பல் ஒன்று தப்பிச் செல்வதாக வையம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. வையம்பட்டி காவல் உதவி ஆய்வாளர் தங்கசாமி தலைமையிலான போலீஸார் அங்கு சென்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது வையம்பட்டி பகுதியில் உள்ள செல்போன் கடை ஒன்றிற்கு காரில் வந்த கும்பல் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை கட்டாக கொடுத்து கொண்டிருப்பது தகவல் தெரிந்தது. போலீசார் அங்கு விரைந்து சென்று அந்த கும்பலை மடக்கி பிடித்தனர். காரை சோதனை செய்த போது காருக்குள் 2 ஆயிரம் கள்ள நோட்டுக்கள் மறைத்து வைத்திருந்தது தெரிந்தது. இதையடுத்து கள்ளநோட்டுக்களை புழக்கத்தில் விடுவதற்காக வாங்கி வைத்த செல்போன் கடை உரிமையாளர் தங்கவேல், காரில் கள்ளநோட்டுகளுடன் வந்த கோவையைச் சேர்ந்த பார்த்தசாரதி, சதீஷ் ஆகியோரை வையம்பட்டி போலீசார் கைது செய்தனர்.

கைதான 3 பேரிடமும் தனித்தனியாக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பால்வண்ணநாதன் தலைமையிலான போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியானது. கைதான பார்த்தசாரதி தன்னை பத்திரிகையாளர் போலவும், வழக்கறிஞர் போலவும் காண்பித்து கொண்டு கள்ளநோட்டுக்களை புழக்கத்தில் விட முயன்றது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இவர் திரைப்பட இயக்குனர் ஒருவரிடமிருந்து திரைப்படங்களில் பயன்படுத்தப்படும் போலி நோட்டுகளை வாங்கி கொண்டு புழக்கத்தில் விடும் போது தான் போலீசில் சிக்கி கொண்டதாக கூறப்படுகிறது.

கைதான 3 பேரிடம் இருந்து 2 ஆயிரம் நோட்டுகள் 42 கட்டுகளுடன் மொத்தம் 84 லட்சம் ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர். பார்த்தசாரதி பயன்படுத்திய காரில் பிரஸ், வக்கீல் என்று எழுதி வைத்து கொண்டு கள்ளநோட்டுக்களை கொண்டு சென்று புழக்கத்தில் விட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அந்த காரை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் முக்கிய நபர் தப்பி ஓடி விட்டார். அவர் யார் என்பது குறித்த தகவல்களை போலீசார் தெரிவிக்க மறுத்து விட்டனர்.

பார்த்தசாரதிக்கு கள்ளநோட்டுகளை கொடுத்த திரைப்பட இயக்குனர் யார்? என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது. அவரின் பின்னணி குறித்த விசாரணையில் போலீசார் இறங்கி உள்ளனர். மேலும் இந்த கள்ள நோட்டுக்கள் கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனால் 3 தனிப்படை போலீசார் கோவை, கேரளாவிற்கு விரைந்துள்ளனர். கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள 3 பேரை போலீஸ் காவலில் எடுத்த விசாரணை நடத்த வையம்பட்டி போலீசார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. போலீஸ் காவலில் எடுத்து விசாரணைக்கு பிறகு பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.