ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரியார் வீதியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் டிரம்ஸ் அடித்து தொண்டர்களுடன் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4-ஆம் தேதி திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார். திருமகன் ஈவேராவின் மறைவு தமிழ்நாடு அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு, பிப்ரவரி 27-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.
இதனை தொடர்ந்து இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் , அதிமுக சார்பில் கே.எஸ் தென்னரசு, தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதையடுத்து அந்தந்த கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள், ஈரோடு கிழக்கு தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்து ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் மிகவும் பரபரப்பாக காட்சியளிக்கிறது.
இந்த நிலையில், அதிமுக வேட்பாளர் கே.எஸ் தென்னரசுவை ஆதரித்து ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரியார் வீதியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தொண்டர்களுடன் டிரம்ஸ் அடித்து வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது நியூஸ் 7 தமிழுக்கு அவர் அளித்த பேட்டியில், இரட்டை இலை சின்னத்திற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. தோல்விபயத்தால் தான் இத்தனை அமைச்சர்கள் ஈரோட்டில் முகாமிட்டு கொண்டிருக்கிறார்கள். பல முறைகேடுகள் அவர்கள் செய்தாலும் அது குறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்தாலும் எந்த பயனுமில்லை. ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்து, பணமா, மனமா என்ற அடிப்படையில் தேர்தலை சந்திக்கிறோம். வரலாற்று திருப்புமுனையாக இந்த தேர்தல் அமையும். சட்டஒழுங்கு சீர்கெட்டு கிடக்கிறது. தமிழகத்திற் கு விடிவு காலம் பிறக்க வேண்டுமென்றால் ஈரோடு கிழக்கு தேர்தல் ஒரு திருப்புமுனையாக அமைய வேண்டும் என்று கூறினார்.
மேலும் ஒபிஎஸ் அணியின் தொண்டர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டால் ஏற்று கொள்வீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்து பேசிய ஆர்.பி.உதயகுமார், ஒபிஎஸ் ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் பிரச்சாரம் செய்வார்களா அல்லது அதற்கான சூழல் இங்குள்ளதா என்று தெரியவில்லை என தெரிவித்துள்ளார்.
- பி. ஜேம்ஸ் லிசா









