2019-21 காலகட்டத்தில் நாட்டில் 1.12 லட்சம் தினக்கூலிகள் உயிரை மாய்த்துக் கொண்டதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் எழுப்பிய கேள்விக்கு, மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் புபேந்தர் யாதவ், “2019ம் ஆண்டில் மட்டும் 32,563 கூலி தொழிலாளிகள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். 2020ம் ஆண்டில் 37,666 தினக்கூலிகளும், 2021ம் ஆண்டில் 42,004 தினக்கூலி தொழிலாளர்களும் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர்.” என்று பதிலளித்தார்.
2020-21 ஆண்டுகளில் கொரோனா வைரஸ் தாக்குதல் மிகக் கொடுமையாக இருந்தது. இதனால் அந்தக் காலகட்டத்தில் தினக்கூலிகள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் ஆங்காங்கே வெளியேறிக் கொண்டிருந்தனர்.
2020 மார்ச் மாதம் ஊரடங்கு போடப்பட்டது. பொது போக்குவரத்து முடங்கியதால் தங்கள் பகுதிகளை அடைய புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பல நூறு கி.மீ. தூரத்துக்கு நடந்தோ, தனியார் வாகனங்களிலோ செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். கிட்டத்தட்ட 8,700 பேர் (பெரும்பாலும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள்) ரயில் தண்டவாளங்களில் விழுந்து மரணமடைந்துள்ளனர்.
2019-21 இந்த மூன்று ஆண்டுகளில் மொத்தம் 4.56 லட்சம் பேர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். 1.12 லட்சம் தினக்கூலிகள், 66,912 இல்லத்தரசிகள், 53,661 சுயதொழில் செய்வோர், 43,420 சம்பளம் பெறும் ஊழியர்கள், 43,385 வேலையில்லா நபர்கள், 35,950 மாணவர்கள், 31,839 விவசாய கூலிகள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா, பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா இந்தத் திட்டங்கள் மூலம் அவர்களின் வாழ்வாதரத்துக்கு உதவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக புபேந்தர் யாதவ் கூறியுள்ளார்.
-ம.பவித்ரா








