பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் அறிக்கை ஒன்றை வெள்யிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது, “மத்திய அரசு கொண்டுவர உத்தேசித்துள்ள வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத் திருத்த மசோதாவை (FCRA) திரும்பப் பெற வேண்டும்” என, தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதை பா.ஜ.க.வைத் தவிர, அனைத்துக் கட்சிகளும் ஆதரித்துள்ளன.
முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு, FCRA சட்டத்தை எதிர்த்து தீர்மானம் கொண்டு வந்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை.
ஆனால், FCRA சட்டத்தை எதிர்த்துப் பேசிய அமைச்சர்களும், தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களும், இந்தத் திருத்தம் நடைமுறைக்கு வந்தால், சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், குழந்தைகள் இல்லங்கள், முதியோர் இல்லங்களை அரசு கையகப்படுத்தும் நிலை வரும் எனத் தவறான தகவல்களைக் கூறியுள்ளனர். இது சிறுபான்மை மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தத் திட்டமிட்டு செய்யப்படும் திசைதிருப்பும் பிரச்சாரமாகும்.
வெளிநாடுகளில் இருந்து நிதி பெறும் தொண்டு, கல்வி, மத நிறுவனங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். குறிப்பிட்ட காலத்தில் பதிவைப் புதுப்பிக்க வேண்டும். வரவு-செலவு விவரங்களைத் தாக்கல் செய்ய வேண்டும். வெளிநாட்டு நிதி எவ்வாறு செலவிடப்பட்டது என்பதையும் தெரிவிக்க வேண்டும். தேச நலன்களுக்கு எதிரான செயல்களுக்கு வெளிநாட்டு நிதியைப் பயன்படுத்தக் கூடாது என்றுதான் FCRA சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
சிறுபான்மை நிறுவனங்கள் உட்பட வெளிநாட்டு நிதி பெறும் எவரும், கல்வி, மருத்துவம், குழந்தைகள் மற்றும் முதியோர் காப்பகங்கள் போன்றவற்றுக்கு 100 சதவீத நிதியையும் செலவிடலாம். அதை மத்திய அரசு கட்டுப்படுத்தவில்லை.
வெளிநாடுகளில் இருந்து பெறும் நிதியை, ‘நிர்வாகச் செலவு’ என்ற பெயரில் மதமாற்றத்திற்கும், மனித உரிமை என்ற பெயரில் தேச நலன்களுக்கு எதிரான செயல்களுக்கும் பயன்படுத்துவதைத் தடுக்கவே, FCRA சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




