“காந்தியடிகளின் கனவுகளை நனவாக்கி, காட்டிய அறவழியில் நமது வெற்றிப் பயணத்தை தொடர்வோம்” – முதலமைச்சர் விஜய்!

காந்தியடிகள் காட்டிய அறவழியில் நமது வெற்றிப் பயணத்தை தொடர்வோம் என்று முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “அகிம்சை என்னும் பேராயுதத்தால் உலகையே வியக்க வைத்து, இந்தியத் திருநாட்டிற்கு விடுதலையைப் பெற்றுத்தந்த மாபெரும் தலைவர், நமது தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாளில் அவரது தேசப்பற்றையும், தியாக வாழ்வையும் போற்றி வணங்குகிறேன்.

எளிமை, நேர்மை, மனிதநேயம், சமத்துவம், சமூக நல்லிணக்கம் ஆகியவற்றைத் தனது வாழ்வின் நெறிகளாகக் கொண்டு, உலகம் முழுமைக்கும் அன்பையும், சகோதரத்துவத்தையும் பரப்பிய மாமனிதராகத் திகழ்ந்தவர்.

மகாத்மா காந்தியடிகளின் கனவுகளை நனவாக்கி, அமைதியும், நல்லிணக்கமும், சகோதரத்துவமும் தழைத்திடும் சமூகத்தை உருவாக்கி, நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் பாதுகாத்து, அவர் காட்டிய அறவழியில் நமது வெற்றிப் பயணத்தைத் தொடர்வோம்”! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.