“தமிழகப் பெண்களின் பாதுகாப்பை தொடர்ந்து கேள்விக்குறியாக்கி வருவது கடும் கண்டனத்திற்குரியது” – நயினார் நாகேந்திரன்!

தமிழகப் பெண்களின் பாதுகாப்பை தொடர்ந்து கேள்விக்குறியாக்கி வருவது கடும் கண்டனத்திற்குரியது என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “கோயம்பேடு நட்சத்திர விடுதியில் பெண் ஊழியர் ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, சென்னை மத்திய மேற்கு மாவட்ட தவெக செயற்குழு உறுப்பினர் பிரபுகுமார் மற்றும் மாவட்ட தவெக இளைஞரணி தலைவர் பாலாஜி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியளிக்கிறது.

ஊருக்கெல்லாம் உபதேசம் சொல்லும் முதலமைச்சர் விஜய் அவர்கள் தனது கட்சிக்காரர்களுக்கு முதலில் ஒழுக்கத்தையும், கண்ணியத்தையும் கற்றுத் தராமல், தமிழகப் பெண்களின் பாதுகாப்பை தொடர்ந்து கேள்விக்குறியாக்கி வருவது கடும் கண்டனத்திற்குரியது!

தவெக ஆட்சியில் இதுவரை நிகழ்ந்துள்ள 300-க்கும் மேற்பட்ட பாலியல் குற்றங்களில் 10% அதாவது 30-க்கும் மேற்பட்ட பாலியல் குற்றங்களில் தவெகவினரே முக்கியக் குற்றவாளிகளாக இருப்பதை, தமிழக முதல்வரும், தவெக தலைமையுமான ஜோசப் விஜய் அவர்கள் எப்படி எளிதாக எடுத்துக் கொள்கிறார் என்று புரியவில்லை. குற்றம் நடந்த பிறகு கைது செய்துவிட்டால் தனது கடமை முடிந்தது என்று நினைக்கிறாரா? குற்றம் நடக்கும் முன்பே அதை தடுப்பது தானே ஒரு நல்ல தலைமைக்கு அழகு?

எனவே, எங்களின் கேள்வி ஒன்றே ஒன்றுதான், தனது சொந்தக் கட்சிக்காரர்களிடம் இருந்தே பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதுகாக்க முடியாத ஜோசப் விஜய் அவர்களுக்கு, தமிழகத்தின் முதல்வராகத் தொடர என்ன தகுதி இருக்கிறது”? இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.