மேகதாது விவகாரம் : பிரதமர் மோடி அமைதி காப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது – மாணிக்கம் தாகூர்

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் மோடி தான் தீர்வு காண முடியும் என்று மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் உள்ள தனியார் விடுதியில் சோனியா காந்தியின் ‘Belonging: A Journey of Love’ என்ற புத்தக வெளியீட்டு விழா நடைபெறுகிறது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக டெல்லி சென்ற தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:

எந்த ஒரு அரசியலும் பேசப்படவில்லை

சோனியா காந்தி அவர்களுடைய புத்தக வெளியீட்டு விழாவில் தமிழக முதலமைச்சர் கலந்து கொண்டது மிகவும் மகிழ்ச்சிகரமானது. பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்கள். இது ஓர் உணர்வுபூர்வமான நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் எந்த ஒரு அரசியலும் பேசப்படவில்லை.

பிரதமர்தான் தீர்வு காண முடியும்

மேகதாது என்பது தமிழகத்திற்கும் கர்நாடகாவிற்கும் இடையிலான நீர்ப் பிரச்சினை. இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை, இரு முதலமைச்சர்களுக்கும் இடையிலான பிரச்சினை. அப்படி இருக்கும்போது, இதனை மத்திய அரசுதான் தீர்த்து வைக்க வேண்டும். குறிப்பாக, மேகதாது அணை விவகாரத்தைப் பொறுத்தவரை மத்திய அரசுதான் தீர்த்து வைக்க முடியும். பிரதமர் மோடிதான் இந்த விவகாரத்தில் தீர்வு காண முடியும்.

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் மோடி அமைதி காப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. பிரதமர் கர்நாடகத்திற்கு ஆதரவாக இருப்பதுபோல் காட்டுகிறது” என்று அவர் பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.