சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “நேற்று முன்தினம் (15-11-2026) தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று முன்தினம் இரவு 11:30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நேற்று காலை (16-11-2026) 08:30 மணி அளவில் அதே பகுதியில் நிலவுகிறது. இது மேலும் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு வங்கக்கடலின் மத்தியப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று மாலை புயலாக (Cyclonic Storm) வலுப்பெறக்கூடும். இது மேலும் வலுப்பெற்று மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதியில் 17-11-2026 மாலை தீவிர புயலாக (Severe Cyclonic Storm) நிலவக்கூடும்.
இது மேலும் வலுவடைந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் 20ம் தேதி நண்பகல் நெல்லூர் மற்றும் துனி இடையே ஆந்திரப் பிரதேச கடற்கரையை மிகத் தீவிரப் புயலாக (Very Severe Cyclonic Storm) கடக்க வாய்ப்புள்ளது. அப்போது மணிக்கு 120 முதல் 130 கி.மீ வேகத்திலும், இடையிடையே மணிக்கு 145 கி.மீ வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும். சுமார் 3.1 கிமீ உயரத்தில் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு கேரளக் கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




