தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 7,198 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும், இதனால் கல்லூரிகளின் கல்வித்தரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 7,198 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பது தெரியவந்துள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி தரவுகள் திரட்டப்பட்ட கல்லூரிகளில் 20 சதவீத கல்லூரிகளில் நிரந்தர ஆசிரியர்களே இல்லை. மேலும், 20 சதவீத கல்லூரிகளில் தலா ஒரு நிரந்தர ஆசிரியர் மட்டுமே பணியாற்றுகின்றனர். அரசு கல்லூரிகளின் அவல நிலையையே இவை அம்பலப்படுத்தியுள்ளன.
61 சதவீத பணியிடங்கள் காலி
தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 181 அரசு கலைக் கல்லூரிகளில், புதிதாகத் தொடங்கப்பட்ட கல்லூரிகளைத் தவிர்த்து, மற்ற கல்லூரிகளில் மொத்தம் 11,909 ஆசிரியர் பணியிடங்கள் உள்ளன. அவற்றில் 7,198 பணியிடங்கள், அதாவது 61 சதவீதம் காலியாக இருப்பதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி விகடன் குழுமம் பெற்ற தரவுகளில் அரசு தெரிவித்துள்ளது.
இவை தவிர, புதிய கல்லூரிகள் மற்றும் புதிய பாடப்பிரிவுகளுக்கு சுமார் 2,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்பட வேண்டும். அவற்றையும் சேர்த்தால் மொத்தப் பணியிடங்கள் 13,909 ஆகவும், காலியிடங்கள் 9,198 ஆகவும் அதிகரிக்கும். இது மொத்தப் பணியிடங்களில் 66 சதவீதமாகும். முழுமையான தரவுகள் கிடைத்த 31 கல்லூரிகளில், வேடசந்தூர், அருப்புக்கோட்டை, தரகம்பட்டி, திருமயம், மணப்பாறை, கொளக்காநத்தம் ஆகிய இடங்களில் உள்ள 6 அரசு கல்லூரிகளில் ஒரு நிரந்தர உதவிப் பேராசிரியர் கூட இல்லை. அனைத்து ஆசிரியர் பணியிடங்களும் காலியாக உள்ளன.
ராமேஸ்வரம், பரமக்குடி, குத்தாலம், சேந்தமங்கலம், ரெட்டியார்சத்திரம், முத்துப்பேட்டை ஆகிய ஊர்களில் உள்ள 6 அரசு கல்லூரிகளில் தலா ஒரு நிரந்தர ஆசிரியர் மட்டுமே பணியாற்றுகின்றனர். திருவாடானை உள்ளிட்ட 5 கல்லூரிகளில் தலா 2 நிரந்தர ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். பல்கலைக்கழகத்துக்கு இணையான கட்டமைப்பைக் கொண்ட கும்பகோணம் அரசு கல்லூரியில் உள்ள 190 ஆசிரியர் பணியிடங்களில் 105 இடங்கள் காலியாக உள்ளன. நாமக்கல், திண்டுக்கல் கல்லூரிகளிலும் 100-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன.
மாணவர் சேர்க்கை சரிவு
ஒரு காலத்தில் அரசு கலைக் கல்லூரிகளில் கல்வித்தரம் சிறப்பாக இருந்தது. அக்கல்லூரிகளில் சேர கடுமையான போட்டி நிலவியது. ஆனால், தற்போது கல்வித்தரம் சீரழிந்துவிட்டதால் அரசு கல்லூரிகளில் சேர மாணவர்கள் முன்வருவதில்லை.
நடப்பாண்டில் மொத்தமுள்ள 1,30,348 இளநிலைப் படிப்புகளுக்கான இடங்களில் 97,287 இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன. சுமார் 25 சதவீத இடங்கள் நிரம்பவில்லை. முதுநிலைப் படிப்புகளில் உள்ள 24,859 இடங்களில் 14,252 மட்டுமே நிரம்பியுள்ளன. இதனால் 43 சதவீத இடங்கள் காலியாக உள்ளன.
இந்த அவலநிலைக்கு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் போதிய எண்ணிக்கையில் ஆசிரியர்கள் இல்லாததே காரணம். இந்தப் பிரச்சினையை கடந்த ஐந்தாண்டுகளுக்கும் மேலாக பாமக உரிய புள்ளிவிவரங்களுடன் சுட்டிக்காட்டி வருகிறது. ஆனால், எந்தப் பயனும் ஏற்படவில்லை.
கடைசியாக 2014-ம் ஆண்டில் அரசு கல்லூரிகளுக்கு 957 விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட்டனர். அதன்பிறகு 12 ஆண்டுகள் கடந்தும் அதிமுக, திமுக ஆட்சிகளில் ஒரு ஆசிரியர் கூட நியமிக்கப்படவில்லை.
ஆசிரியர் நியமனத்தில் சிக்கல்
கடந்த திமுக ஆட்சியின் இறுதியில் 2,708 உதவிப் பேராசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய போட்டித் தேர்வுகளின் விடைத்தாள்களைத் திருத்தியதில் குளறுபடிகள் மற்றும் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இதனால், இன்று வரை நியமனங்கள் நடைபெறவில்லை. முந்தைய திமுக ஆட்சியின் இறுதியில் 5 பேருக்கு மட்டுமே பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டதுடன், இந்த நடவடிக்கை முடங்கிவிட்டது. தவெக ஆட்சிக்கு வந்த பின்னர் அனைத்து உதவிப் பேராசிரியர் பணியிடங்களும் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், அடுத்தடுத்த ஆண்டுகளில் 3 கட்டங்களாக 6,000 உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் அறிவித்தார்.
ஏற்கெனவே போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்ட 2,708 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாத நிலையில், புதிய ஆள்தேர்வு அறிவிப்புகளை வெளியிட முடியாது. தமிழக அரசு நினைத்தால், உதவிப் பேராசிரியர் பணிகளுக்காக நடத்தப்பட்ட போட்டித் தேர்வுகளில் கட்டுரை வடிவிலான விடைத்தாள்களை மட்டும் உரிய வழிகாட்டுதல்களுடன் மறுமதிப்பீடு செய்ய முடியும். இதன் மூலம் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வு காணலாம்.
ஆனால், தமிழக அரசு இதைச் செய்யாமல், உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை இழுத்தடிக்கவே விரும்புவதாக அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார். இதனால், புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார். ஒரு காலத்தில் உயர்கல்விக் கோயில்களாகத் திகழ்ந்த அரசு கலைக் கல்லூரிகள், தற்போது ஆசிரியர்கள் இல்லாமல் முடங்கிக் கிடப்பது தமிழகத்திற்கு நன்மை பயக்காது. அக்கல்லூரிகளுக்குப் புத்துயிரூட்ட வேண்டுமானால், அங்குள்ள அனைத்து காலிப் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும்.
ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட 2,708 உதவிப் பேராசிரியர் நியமனத்தில் உள்ள சிக்கல்களைக் களைவதுடன், மீதமுள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பையும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




