அதிமுகவில் உள்ள எட்டப்பர்களை வைத்து கட்சியை முடக்கிவிடலாம் என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கனவு பலிக்காது என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள நல்லாளத்தில் பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய
நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.சண்முகம், எத்தனை பன்னீர்செல்வம் வந்தாலும், எத்தனை மு.க.ஸ்டாலின் வந்தாலும் அ.தி.மு.க.வை யாராலும் அழிக்க முடியாது என்றார்.தேர்தல் நேரத்தில் தி.மு.க.வினர் ஏராளமான வாக்குறுதிகளை அளித்தனர். மூன்றாவது பட்ஜெட் போடப்பட உள்ள நிலையில் தி.மு.க.வினர் எதையும் சாதிக்கவில்லை.
விலைவாசி உயர்வால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நெல் அறுவடை அதிகரித்தாலும் விலை உயர்த்தப்படாததால் அரிசி விலை கூடுதலாக விற்கப்படுகிறது. சொத்து வரி 150 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. மின்சார கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கெல்லாம் மத்திய அரசுதான் காரணம் என்கின்றனர். தற்போது ஏற்றப்பட்டுள்ள மின் கட்டண உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும்.
தி.மு.க. அமைச்சர்கள் மீது உள்ள வழக்குகளில் விரைவில் அவர்கள் சிறை
செல்வார்கள். நாங்கள் சிறையைக் கண்டு அஞ்ச மாட்டோம் எங்கள் மீது எத்தனை வழக்குகள் வேண்டுமானாலும் போடுங்கள் எங்களது மக்கள் பணி தொடரும். இன்றைக்கு அதிமுகவில் மூன்று முறை முதலமைச்சர் பதவியை அனுபவித்துவிட்டு, கட்சி அலுவலகத்தை எட்டி உதைத்து, அலுவலகத்தை சூறையாடி பத்திரம் உள்ளிட்ட அனைத்தையும் திருடி சென்றுவிட்டனர். அதிமுகவில் உள்ள எட்டப்பர்களை வைத்து அதிமுகவை முடக்கிவிடலாம் என நினைக்கும் மு.க.ஸ்டாலினின் கனவு பலிக்காது.
ஓ.பன்னீர்செல்வம் நாளை திமுகவில் இருப்பாரா அல்லது பாஜகவில் இருப்பாரா என தெரியாது. தொண்டர்கள் உள்ளவரை யார் வந்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது. நூறு பன்னீர்செல்வம் வந்தாலும் அதிமுகவை எதுவும் செய்ய முடியாது என விமர்சனம் செய்தார். தமிழ்நாட்டில் சாலைகள் முறையாக சீரமைக்கப்படுவதில்லை என குற்றம்சாட்டிய சி.வி.சண்முகம், இதனை அரசு கண்டும் காணாமலும் உள்ளதாக குறிப்பிட்டார்.







