கல்வி, மருத்துவம் ஆகிய இரண்டிலும் முதல்வர் அதிக கவனம் செலுத்தி வருகிறார் என்றும், அனைவருக்கும் படிப்புக்கேற்ற வேலை என்பதே திராவிட மாடல் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் ஈச்சனாரி பகுதியில் உள்ள ரத்தினம் கல்வி குழுமத்தின் பொன்விழாவை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார். பொன்விழா நினைவுத்தூணை திறந்து வைத்த அவர், இந்நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றினார்.
அப்போது பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், ”கல்வி, மருத்துவம் ஆகிய இரண்டிலும் முதல்வர் அதிக கவனம் செலுத்தி வருகிறார். மற்ற நாடுகள் நம்மை பார்த்து பயப்படுகிறார்கள். நம்மிடம் உள்ள ஆயுதத்தை பார்த்து அல்ல. நம்மிடம் உள்ள இளைய
சமுதாயத்தை பார்த்து. பிற்போக்குவாதிகளை விட நாம் வேகமாக இருக்க வேண்டும். அனைவருக்கும் படிப்புக்கேற்ற வேலை என்பதே திராவிட மாடல். திறமை என்பது வாங்கும் மதிப்பெண்களில் இல்லை. ஒவ்வொருவரின் தனித்திறமையில் இருக்கிறது.
சிபிஎஸ்சி, மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் இருந்து வருகிறேன் என்கிறார்கள். எங்களிடம் அரசுப் பள்ளிகள் இருக்கிறது. நாங்களும் எந்த விதத்திலும் சளைத்தவர்கள் அல்ல. எங்களிடம் உள்ள பாடத்திட்டத்தை போலவே சிபிஎஸ்சி மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் பாடத்திட்டம் உள்ளது. அரசுப் பள்ளி என்பது வறுமையின் அடையாளம் அல்ல, பெருமையின் அடையாளம் என்பதை நிலைநாட்டுவதற்காகத்தான் உழைத்துக் கொண்டிருக்கிறோம்.
தனியார் பள்ளி நடத்துபவர்களும் அரசுப் பள்ளிகளை வந்து பார்க்க வேண்டும். நாங்களும் தனியார் பள்ளிகளை பார்க்கிறோம். எங்களிடம் இருந்து தனியார் பள்ளிகள் சிலவற்றைக் கற்றுக்கொள்ள வேண்டும். நாங்களும் தனியார் பள்ளிகளை பார்த்து கற்றுக் கொள்கிறோம்” என்று பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் “Icons of Coimbatore” என்ற பெயரில் தொழில், கலை, மருத்துவம் உள்ளிட்ட பிரிவுகளில் சிறந்து விளங்குபவர்கள் ஒன்பது பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டதோடு, கல்லூரியில் முன்னாள் மாணவர்களில் சிறந்து விளங்குபவர்களுக்கு, முன்னாள் மாணவர்கள் விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.







