முக்கியச் செய்திகள் தமிழகம்

10% இட ஒதுக்கீடு – தமிழ்நாடு காங்கிரஸ் இதயப்பூர்வ வரவேற்பு

பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கான 10% இடஒதுக்கீடு செல்லும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது என அக்கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். 

பொருளாதாரத்தில் பின் தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத் திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
இவ்வழக்கில் தலைமை நீதிபதி யு.யு.லலித் மற்றும் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரவீந்திர பட், பீலா திரிவேதி, ஜே.பி.பர்திவாலா அடங்கிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியது. 5 நீதிபதிகளில் 3 நீதிபதிகள் முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவிகித இடஒதுக்கீட்டை உறுதி செய்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த தீர்ப்புக்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கான 10 சதவிகித இடஒதுக்கீடு செல்லும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது. பொரும்பான்மையான நீதிபதிகள் ஆதரவாக தீர்ப்பளித்திருக்கிறார்கள். 103-வது அரசியலமைப்பு சட்டத் திருத்தம் சரியா, தவறா என்ற விவாதத்தில் பெரும்பான்மையான நீதிபதிகள் சரி என்றே கூறியிருக்கிறார்கள்.

காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை 50 சதவிகித இடஒதுக்கீட்டு வரம்பை மீற வேண்டிய அவசியம் ஏற்பட்டால், அனைத்து பிரிவினருக்குமான நீதியை அது வழங்கும் என்றால், அதனை காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது. இந்தியாவில் ஐந்தாயிரம் ஆண்டுகளாக சமூகநீதி என்பது இல்லை. ஒரு சிலரை ஒதுக்கி வைக்க வேண்டுமென்ற நடைமுறையை அந்தக்காலத்தில் நீதி என்று சொல்லி அதனை அங்கீகரித்திருக்கிறார்கள்.

ஆனால், சுதந்திரம் பெற்ற பிறகு அந்த நடைமுறையை பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள் உடைத்தெறிந்து நாடாளுமன்றத்தில் முதன் முறையாக அரசியல் சட்டத்தை திருத்தி இடஒதுக்கீட்டிற்கு வழிவகுத்தார்கள். தற்போது 75 ஆண்டுகள் ஆகிவிட்டன. எனவே, இன்றைய நடைமுறையை பின்பற்றி இன்றைக்கு பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென்று காங்கிரஸ் கட்சி முடிவெடுத்தது. 2005-2006 இல் இதற்கான முயற்சி டாக்டர் மன்மோகன்சிங் அரசால் எடுக்கப்பட்டது. 2014 இல் நாடாளுமன்றத்தில் இதற்கான மசோதா தயாரிக்கப்பட்டது. ஆனால், பாரதிய ஜனதா கட்சி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய 5 ஆண்டுகள் எடுத்துக் கொண்டது.

நீதிபதி ரவீந்திரபட் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியிருக்கிறார். தாழ்த்தப்பட்டோர் 38 சதவிகிதம் வறுமையில் உள்ளனர். பழங்குடியினர் 48 சதவிகிதம் பேர் உள்ளனர். பிற்படுத்தப்பட்டோரில் 33.1 சதவிகிதம் பேர் வறுமையில் வாடுகின்றனர். இவர்களுக்கு மேலும் சலுகைகள் வழங்க வேண்டுமென அவர் கூறுகிறார். தற்பொழுது பொதுப் பிரிவினருக்கு 27 சதவிகிதமும், எஸ்.சி பிரிவினருக்கு 15 சதவிகிதமும், பழங்குடியினருக்கு 7.5 சதவிகிதமும் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இவை மேலும் மேம்படுத்த இயலுமா என்பதனை சட்ட வல்லுநர்களும், அரசியல் அறிஞர்களும், சமூக பங்கேற்பாளர்களும் விவாதிக்க வேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் கேட்டுக் கொள்கிறது.

பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கு 10 சதவிகித இடஒதுக்கீட்டை எதிர்ப்பது என்பதும் சமூக நீதியாகாது. ஏனெனில், ஐந்தாயிரம் ஆண்டு காலமாக சிரமப்பட்ட பெரும்பகுதி சமுதாயத்துக்கு சமூகநீதி வழங்கப்படவில்லை. இப்பொழுது எங்களுக்கும் வழங்குங்கள் என்று கேட்பது சரியானதாக இருக்கும். ஆனால், எங்களைப் போலவே பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினரும் சங்கடப்பட வேண்டும் என்று கூறுவது சமூகநீதியாகாது.

சமூகநீதி என்பது மனிதகுலத்திற்கே பொதுவானதேயொழிய எந்தவொரு தரப்பிற்கும் அது உரியதல்ல. எனவே, 10 சதவிகித இடஒதுக்கீடு சரியான நடவடிக்கை என கருதி, தமிழக காங்கிரஸ் அதனை இதயப்பூர்வமாக வரவேற்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

திமுக அரசு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்- மத்திய அமைச்சர் எல்.முருகன்

Jayasheeba

படப்பிடிப்பு தளத்தில் ஆடு, மாடுகளுடன் ’கீர்த்தி சுரேஷ்’ செய்யும் க்யூட் சேட்டைகள்; இன்ஸ்டாவில் வைரலாகும் வீடியோ!

Web Editor

கனியாமூர் வழக்கில் ஆசிரியர்கள் சிறைவாசம் அனுபவிப்பது துரதிஷ்டவசமானது – உயர் நீதிமன்றம்

Web Editor