10% இடஒதுக்கீடு வழங்கிய விவகாரம் தொடர்பாக சட்டரீதியாக ஆலோசிக்க வருகிற 12-ம் தேதி சட்டமன்ற அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என தமிழ்நாடு அரசு அழைப்பு விடுத்துள்ளது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு தமிழ்நாட்டில் பல்வேறு எதிர்ப்புகள் எழுந்துள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. இதில், அரசின் தலைமை வழக்கறிஞர்கள் சண்முகசுந்தரம், வில்சன் மற்றும் என்.ஆர்.இளங்கோ உள்ளிட்டோர் பங்கேற்றனர். 10% இட ஒதுக்கீடு சமூகநீதிக்கான குரல் நாடெங்கும் ஓங்கி ஒலித்திடச் செய்ய ஒத்த கருத்துடைய அமைப்புகள் ஒருங்கிணைய வேண்டுமென்று கேட்டுக் கொள்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் கூட்டத்தில், மு.க.ஸ்டாலின் பேசும்போது, பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவிகித இடஒதுக்கீடு குறித்து உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பினையடுத்து, அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவிகிதம் இடஒதுக்கீடு அளிப்பதற்கான வழிவகை செய்யும் அரசியல் சட்டத் திருத்தம், கடந்த 2019 ஆம் ஆண்டு ஒன்றிய அரசால் நிறைவேற்றப்பட்டது. இந்த இடஒதுக்கீட்டு முறை சமூக நீதிக்கும், சமத்துவத்திற்கும் எதிராக அமைவதோடு, சமூக நீதிக் கொள்கைக்கும் மாறானது என்பதால், இதுதொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் விவாதித்து முடிவு எடுப்பது அவசியம்.
இதனால், வருகின்ற 12-ம் தேதி (சனிக்கிழமை) அன்று காலை 10.30 மணிக்கு தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் பத்தாவது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில், சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறும். இதில் கலந்து கொள்ள அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்களுக்கும் கடிதம் மூலம் அழைப்பு விடுக்கப்படும் என்றார். மேலும் கூட்டத்தில் ஒவ்வொரு சட்டமன்ற கட்சியின் சார்பில் தலா இரண்டு பிரதிநிதகள் பங்கேற்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கூட்டத்தில், 10 சதவிகித இடஒதுக்கீடு தீர்ப்பினை முழுமையாக ஆராய்ந்து சட்ட வல்லுநர்களோடு கலந்தாலோசித்து, போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதனிடையே, இடஒதுக்கீடு விவகாரத்தில் தமிழ்நாடு அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி முடிவெடுக்கும் வாய்ப்பு இருப்பதாக நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் முன்னதாகவே செய்தி வெளியிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.