2026 சட்டமன்ற தேர்தலையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று பிரச்சாரத்தை தொடங்கினார். சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கோயிலில் வழிபாடு செய்தார். தொடர்ந்து அவர் மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதியில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது ;
அதிமுக, 210 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். கூட்டணி கட்சிகளை அழைத்தோம், பேசினோம், எத்தனை இடங்கள் என அறிவித்தோம். தேர்தல் அறிக்கையும் வெளியிட்டோம். அதிமுகவின் முதல்கட்ட வேட்பளர் பட்டியலை இன்று வெளியிட்டோம். முழுமையான பட்டியல் 3 நாட்களில் வெளியிடப்படும். தொகுதிகள் இறுதியாகாமல் திமுகவின் நிலைமை தான் பரிதாபமாக உள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பரவல் உச்சத்தில் இருந்தபோதும் அதிமுக அரசு சிறப்பாக செயல்பட்டது. சாதாரண மக்களின் துன்பங்களை புரிந்துகொண்டு அதிமுக ஆட்சி நடைபெற்றது.
தமிழ்நாட்டை திராவிட முன்னேற்றக் கழகத்தின் 4 அதிகார மையங்கள் ஆட்டிப் படைக்கிறது. கொடுத்த வாக்குறுதிகளில் 95 சதவீதம் நிறைவேற்றிவிட்டதாக பச்சை பொய் சொல்கிறது திமுக. கல்விக்கடனை ரத்து, நீட் தேர்வுக்கு விலக்கு என்று சொன்னார்கள்.. செய்தார்களா?
திமுக ஆட்சி என்பது செல்வந்தர்களின் புகலிடமாக உள்ளது. அங்கு ஏழைகளுக்கு இடமில்லை. ஆளுங்கட்சி எம்எல்ஏ மருத்துவமனையில் கிட்னி முறைகேடு நடைபெற்றது. மு.க.ஸ்டாலின் சூப்பர் முதல்வர் தான், கடன் வாங்குவதில்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.







