சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் திமுக, பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகளிலிருந்து 700க்கும் மேற்பட்டோர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணையும் விழா நடைபெற்றது. அதில் பங்கேற்ற பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “நான்கில் ஒரு பங்கு வாக்குறுதி கூட திமுக நிறைவேற்றவில்லை. கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வரும் திமுக பிறகு மக்களை ஏமாற்றி விடும். அதிமுக அளித்த தேர்தல் வாக்குறுதி அனைத்தும் நிறைவேற்றும்.
ஐந்து முக்கியமான தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளோம். பெண்களுக்கு மாதந்தோறும் 2000 ரூபாய் வங்கி கணக்கில் வைக்கப்படும். ஆண்களுக்கு கட்டணமில்லா பேருந்து சேவை, வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டி தரப்படும். 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் ரத்து என தவறான தகவலை பரப்பி வருகின்றனர்.
100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் 125 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது என்பது உண்மை, அதிமுக ஆட்சிக்கு வந்ததும் அது 150 நாட்களாக உயர்த்தப்படும். அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அம்மா மினி கிளினிக் திட்டம் திட்டமிட்டு மூடப்பட்டது. அதிமுக ஆட்சி அமைந்த உடன் மீண்டும் மினி கிளினிக் திட்டம் செயல்படுத்தப்படும். திமுக ஆட்சியில் சுமார் 4 லட்சம் கோடி அளவிற்கு ஊழல் நடைபெற்று உள்ளது. 2011 முதல் 2021 வரை பல தோல்விகளை சந்தித்த கட்சி தான் திமுக. ஊழல் குறித்து அமலாக்கத்துறை இரண்டு முறை கடிதம் எழுதியும் ஸ்டாலின் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.







