திருவள்ளூரில் பள்ளி சுவர் இடிந்து விழுந்து 7ம் வகுப்பு மாணவர் உயிரிழந்த சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,
“திருவள்ளூர் மாவட்டத்தில் கொண்டாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பக்கவாட்டுச் சுவர் இடிந்து விழுந்து ஏழாம் வகுப்பு மாணவர் ஒருவரின் உயிர் பறிபோயுள்ளது மிகுந்த அதிர்ச்சியையும் கோபத்தையும் உண்டாக்குகிறது. படித்து முன்னேற வேண்டும் என்னும் நம்பிக்கையில் பிள்ளைகளை அரசுப் பள்ளிக்கு அனுப்பினால், பிள்ளைகளின் தலையில் சுவரை இடிந்து விழச் செய்து, பெற்றோர் வயிற்றில் இடியை இறக்குவது தான் பள்ளிக்கல்வித்துறையின் பொற்காலமா?
https://x.com/NainarBJP/status/2000881851196694710
கோடி கோடியாய் பணத்தைக் கொட்டி “கல்வியில் சிறந்த தமிழ்நாடு” என்று பிரம்மாண்டமாக விழாக்களை நடத்தும் திமுக அரசுக்கு அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்த மனமில்லையா? இன்னும் எத்தனைப் பிஞ்சு உயிர்களைக் காவு வாங்கினால் திமுக அரசுக்கு மாணவர்களின் நலன் மீது அக்கறை வரும்?
அரசுப் பள்ளி மாணவர்களின் உயிரோடு விளையாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் ஆகியோரின் கைகளில் உள்ள இந்த இரத்தக் கறையை துடைத்தெறிய முடியாது! அலட்சியப் போக்கால் ஏழை எளிய மாணவர்களின் உயிரைப் பறித்துவிட்டு, மத்திய அரசின் நவோதயா பள்ளிகளையும் வரவிடாமல் தடுத்துவிட்டு, “அப்பா” என்னும் நாடகம் போடும் இந்தப் பாவம் திமுக அரசை சும்மா விடாது!”
இவ்வாறு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.







