பள்ளி சுவர் விழுந்து உயிரிழந்த மாணவரின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!

திருவள்ளூரில் பள்ளி சுவர் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த மாணவரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே உள்ள ஆர்.கே.பேட்டை தாலுகா கொண்டாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் மோகித் என்ற மாணவர் ஏழாம் வகுப்பு பயின்று வந்தார். நேற்று வழக்கம்போல் பள்ளிக்கு சென்ற மாணவர்கள் பள்ளி வளாகத்தில் இருந்தபோது, பள்ளி கட்டிடத்தின் கைப்பிடி சுவர் திடீரென இடிந்து விழுந்ததாக தெரிகிறது. இந்த விபத்தில் மோகித் என்ற மாணவர் இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்தார்.

உடனடியாக ஆசிரியர்கள் மாணவரை மீட்டு அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில், உயிரிழந்த மாணவரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

“திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை வட்டம், அம்மனேரி கொண்டாபுரம், அரசு உயர்நிலைப்பள்ளியில் ஏழாம் வகுப்பு பயின்று வந்த மோஹித் (வயது 12) த/பெ. சரத்குமார் என்பவர் நேற்று (16.12.2025) நண்பகல் 1.00 மணி அளவில் பள்ளியின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.
மேற்படி சம்பவத்தில் உயிரிழந்த மாணவரின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து மூன்று லட்சம் ரூபாய் வழங்கிடவும் ஆணையிட்டுள்ளேன்”

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.