சுற்றுலா துறை சார்பில் நடைபெற்ற பொங்கல் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக குடும்பத்துடன் கலந்து கொண்ட செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் தலையில் கரகம் வைத்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுடன் நடனம் ஆடி அசத்தினார்.
தமிழக சுற்றுலா துறை சார்பில் செங்கல்பட்டு மாவட்ட சுற்றுலா துறை அலுவலர் சக்திவேல் ஏற்பாட்டில் சென்னை கிழக்கு கடற்கரை சாலை கானத்தூரில் உள்ள தக்ஷின சித்ராவில் சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது. உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை பார்க்க செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை காட்டிலும் மாமல்லபுரத்திற்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். சர்வதேச சுற்றுலாத்தலமான மாமல்லபுரத்துக்கு வருகை தந்துள்ள பல்வேறு வெளிநாடுகளைச் சேர்ந்த 92 சுற்றுலா பயணிகளுடன் சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி வெகு சிறப்பாகவும் விமரிசையாகவும் நடைபெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் அவரது குழந்தை, மனைவி என குடும்பத்தோடு கலந்து கொண்டு பொங்கல் பானையில் வெள்ளமிட்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். 5 பெரிய மண்பானையில் நம் நாட்டு பெண்கள் பொங்கலிட்டு அது பொங்கி வரும் வேளையில் வெளிநாட்டு பெண் சுற்றுலா பயணி ஒருவர் பொங்கலை கிளறி மகிழ்ச்சியடைந்தார்.
அதைத்தொடர்ந்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக நாதஸ்வரம், தப்பாட்டம் முழங்க கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை உள்ளிட்ட தமிழர்களின் பாரம்பரிய பல்வேறு கலை நிகழ்ச்சிகள் அரங்கேறியது. யாரும் எதிர்பாராத நிலையில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் தலையில் கரகம் வைத்துக்கொண்டு வெளிநாட்டு சுற்றுலா பெண் பயணி ஒருவருடன் உற்சாக நடனமாடி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளையும், தமிழக சுற்றுலா பயணிகளையும் மகிழ வைத்தார்.
அதைத்தொடர்ந்து பல்வேறு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தமிழக பெண்களுடனும் சிறுவர்களுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்டு மகிழ்ந்தனர். அதைத்தொடர்ந்து அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உறியடி போட்டியை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்து தனது குழந்தை மற்றும் மனைவியுடன் பார்த்து ரசித்தார்.
பின்னர் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை மாட்டு வண்டியில் அமர வைத்து அவர்களுக்கு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் பொங்கலோ பொங்கல் பொங்கலோ பொங்கல் என குரல் எழுப்பியவாறு மகிழ்ச்சியாக மாட்டு வண்டியை ஓட்டி அசித்தினார்.
வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சென்ற மாட்டு வண்டிக்கு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் சாரதியாக மாறியது பார்ப்போரை வியக்க வைத்தது. அங்கு மண்பாண்டங்கள் செய்யும் இடத்திற்கு சென்ற சுற்றுலா பெண் பயணியும், மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் அவரது மனைவியும் மண்பாண்டம் செய்ததை தனது பெண் குழந்தையுடன் பார்த்து ரசித்து மகிழ்ந்தார்.
இறுதியில் வெளிநாட்டை சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் பரிசுகளை வழங்கினார். பல்வேறு வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்துள்ள சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் மாட்டுவண்டிக்கு சாரதியாக மாறியதை அறிந்து பலதரப்பில் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.