முக்கியச் செய்திகள் தமிழகம்

சாதி, மதத்துக்கு ஆதரவாக பணியாற்றுவோரை தேர்வு செய்யக்கூடாது: பள்ளிகல்வித்துறை

இல்லம் தேடிக் கல்வி திட்டத்தில் தன்னார்வலர்களைத் தேர்வு செய்வதற்கான வழிகாட்டுதல்களை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

கொரோனா காலத்தில் மாணவர்களுக்கு ஏற்பட்ட கற்றல் இடைவெளியைப் போக்க இல்லம் தேடி கல்வி என்ற திட்டத்தை தமிழ்நாடு அரசு கொண்டு வந்தது. விழுப்புரம் மாவட்டம் முதலியார்குப்பத்தின் இத்திட்டத்தை முதலமைச்சர் தொடங்கிவைத்தார். தன்னார்வலர்கள் மூலம் மாலை நேரங்களில் வீடுகளுக்கே சென்று மாணவர்களுக்கு பயிற்றுவிப்பது இதன் நோக்கம் எனவும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் தேசிய கல்வி கொள்கை அம்சங்களைச் செயல்படுத்துவது போலவும், தன்னார்வலர்கள் என்ற பேரில் மதவாதிகள் இத்திட்டத்தின் நுழைய வாய்ப்புள்ளதாகவும் கி.வீரமணி, முத்தரசன் உள்ளிட்ட தலைவர்கள் கருத்து தெரிவித்தனர். இதனையடுத்து அறிக்கை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாற்றுக் கருத்துகளை அரசு கவனத்தில் எடுத்துக்கொண்டுள்ளது, அரசின் வழிகாட்டுதல்களை முறையாகக் கடைபிடிப்பவர்கள் மட்டுமே தன்னார்வலர்களாகத் தொடர அனுமதிக்கப்படுவர் என விளக்கம் அளித்தார்.

இந்த நிலையில் இல்லம் தேடிக் கல்வி திட்டத்தில் தன்னார்வலர்களைத் தேர்வு செய்வதற்கான வழிகாட்டுதல்களை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதில், “சாதி, மத பின்புலத்தை ஆராய்ந்து தேர்வு செய்ய வேண்டும், எந்த சாதிக்கும், மதத்துக்கும் சார்பாக பணியாற்றுவோரைத் தேர்வு செய்தல் கூடாது. விருப்பு, வெறுப்புக்கு அப்பாற்பட்டவராக இருத்தல் அவசியம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பெண்களுக்கு முன்னுரிமை தரப்பட வேண்டுமெனவும், கல்விச் சான்றிதழ்களை சரிபார்த்த பின்னர் தேர்வு செய்ய வேண்டும் என்றும், குழந்தைகளை கையாளும் திறனறி தேர்வு நடத்தப்பட வேண்டும், பள்ளிகள் வாயிலாக தேர்வு செய்யப்படும் தன்னார்வலர்களின் தகுதியை, ஒன்றிய / மாவட்ட அளவிலான குழுக்கள் சரிபார்த்தல் அவசியம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் தன்னார்வலர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Advertisement:
SHARE

Related posts

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20% இடஒதுக்கீடு

Halley karthi

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரி நீர் அளவு அதிகரிப்பு

Halley karthi

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது: முதல்வர்

எல்.ரேணுகாதேவி