சேலத்தில் கணவனை கொலை செய்து பேரலில் அடைத்து வைத்திருந்த மனைவியையும், அவரது காதலனையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
சேலம் கிச்சிப்பாளையத்தை சேர்ந்த சேதுபதி – பிரியா தம்பதி, கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்த நிலையில், 6 வயதில் ஒரு குழந்தையும், 10 மாதத்தில் ஒரு குழந்தையும் உள்ளது. இந்த நிலையில், வெளியூர்களுக்கு வேலைக்குச் செல்லும் சேதுபதி, ஊதியத்தை மனைவியிடம் கொடுக்காமல், மது அருந்தி வந்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே, பிரியாவுக்கும், அவரின் வீட்டருகே வசிக்கும் சதீஷ்குமார் என்பவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. இதனால், இருவரும் இணைந்து திட்டமிட்டு சேதுபதியை கொலை செய்துள்ளனர். இதையடுத்து, சேதுபதியின் உடலை பேரலில் அடைத்து வைத்துள்ளனர். இந்த பேரலை வெளியே எடுத்துச் செல்ல முயன்ற போது, அருகில் வசிப்பவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டதால், காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, அழுகிய நிலையில் இருந்த சேதுபதியின் உடலை கைப்பற்றிய போலீசார், உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். கணவரை கொலை செய்து பேரலில் அடைத்த மனைவியையும், அவருக்கு உடந்தையாக இருந்த காதலர் சதீஷ் குமாரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.








