முதியோர் ஓய்வூதியம் பெற வங்கிக் கணக்கோடு ஆதார் இணைப்பு நிபந்தனையை கைவிட வேண்டும் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை!

முதியோர் ஓய்வூதியம் பெற தமிழ்நாடு அரசு, வங்கிக் கணக்குடன் ஆதார் இணைக்கப்படுவதை கட்டாயம் ஆக்க கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை வைத்துள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு செயலாளர் பெ.சண்முகம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “முதியோர் ஓய்வூதியம் பெறுவதற்கு, ஆதார் இணைக்கப்பட்ட வங்கி கணக்கிலேயே செலுத்தப்பட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு வலியுறுத்துவதால் பெரும் அவதிகளுக்கு ஆளாகி இருப்பதாக மூத்த குடிமக்கள் பலர் தெரிவித்துள்ளார்கள்.

ஆதார் இணைக்கப்படாத வங்கிக் கணக்குகள், பெயர்களில் உள்ள வேறுபாடுகள் உள்ளிட்ட பிரச்சனைகளால் முதியோர் ஓய்வூதியம் பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு தடைபட்டிருக்கிறது என்றும், முதியோர் ஓய்வூதியம் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படாததால் மூத்த குடிமக்கள் வட்டாட்சியர் அலுவலகங்களில் பெரும் எண்ணிக்கையில் வந்து முறையிடுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடுமையான வெயில் சுட்டெரிக்கும் வேளையில், இத்தகைய அலைச்சல் உடல்ரீதியாகவும் அவர்களை பாதிக்க கூடியது. ஆதார் மையங்களுக்கு, வங்கிகளுக்கு உடன் அழைத்துச் செல்ல உதவி இல்லாதவர்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகிறார்கள்.

இந்த திடீர் அறிவிப்பு மூத்த குடிமக்களுக்கு மன உளைச்சலையும், அலைச்சலையும் ஏற்படுத்தி இருப்பதை கருத்தில் கொண்டு முதியோர் ஓய்வூதியம் பெறுவதற்கு தமிழ்நாடு அரசு, வங்கிக் கணக்குடன் ஆதார் இணைக்கப்படுவது என்பதை கட்டாயம் ஆக்க கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கேட்டுக்கொள்கிறது”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.