குடியரசு தின விழாவை முன்னிட்டு சென்னை லயோலா கல்லூரியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக துப்புரவு பணியாளராக பணியாற்றி வரும் வள்ளி அம்மாள் இன்று கல்லூரி வளாகத்தில் தேசிய கொடியை ஏற்ற வைத்த நிகழ்வு பலரையும் நெகிழ வைத்துள்ளது.
நாட்டின் 74-வது குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிகழ்வையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் ஆரம்பித்து ஒவ்வொரு அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், ரயில்வே துறை, கல்வித்துறை என ஒவ்வொரு இடங்களிலும் மூவர்ணக் கொடியை அந்தந்த துறை உயர் அதிகாரிகள் ஏற்றி வைத்து மரியாதையை செய்வது வழக்கமாக இருக்கும்.
ஆனால் சென்னையில் மிகவும் பிரசித்திபெற்ற கல்வி நிறுவனங்களில், கல்லூரிகளில் ஒன்றான சென்னை லயோலா கல்லூரி இந்த ஆண்டு சற்று வித்யாசமாக தங்களது கல்வி நிறுவனத்தில் 30-ஆண்டுகளுக்கும் மேலாக தூய்மை பணியாளராக பணியாற்றி வந்த வள்ளியம்மாளை வைத்து 74-வது குடியரசு தின விழா தேசிய கொடியை ஏற்ற வைத்து பெருமை படுத்தியுள்ளனர்.வள்ளியம்மாள் தேசிய கொடியை ஏற்றி வைத்த இந்த சம்பவம் பார்ப்பவர்கள் பலரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது
உயர் பதவிகளில், பொறுப்புகளில் இருப்பவர்களால் மட்டும்தான் இந்த தேசிய கொடியை ஏற்ற முடியும் என்பதற்கு இல்லை .நம்மை போன்ற சாமானிய மக்களாலும் தேசிய கொடியை ஏற்றி வைத்து பெருமை படுத்த முடியும் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது.








