“வரி முறைகேடு விவகாரத்தில் முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார்” – உதயநிதி ஸ்டாலின்!

மதுரையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத்தின் வளர்ச்சி பணிகள், அரசின் நலத்திட்டங்கள் மக்களிடம் சென்றடைதல் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையிலான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர்கள் மூர்த்தி, PTR பழனிவேல் தியாகராஜன், அரசு கூடுதல் தலைமை செயலாளர் பிரதீப் யாதவ், அரசு கூடுதல் செயலாளர் உமா, மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார், மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன், நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மாநகர காவல் ஆணையாளர் லோகநான், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற வரும் அரசு திட்டப்பணிகள் குறித்து மேற்கொள்ளப்பட்டது. அரசின் பல்வேறு திட்டப் பணிகள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது, ஒரு சில திட்டப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. தொய்வாக நடைபெறக்கூடிய அரசு திட்டப்பணிகளை விரைவாக முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் முதன் முறையாக உலகக்கோப்பை ஜூனியர் ஹாக்கி போட்டிகள் நவம்பர் 28 முதல் டிசம்பர் 10 வரை நடைபெறுகிறது. உலகெங்கும் இருந்து 29 அணிகள் இப்போட்டியில் பங்கேற்று விளையாட உள்ளன. முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டியில் பிற மாநில விளையாட்டு வீரர்களை விளையாட கூடாது என சொல்ல முடியாது. பிற மாநிலங்களைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் தமிழகத்தில் தங்கி படிக்கும் போது அவர்களை விளையாட்டு போட்டிகளில் விளையாட அனுமதிக்கலாம்.

முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் ஒவ்வொரு ஆண்டும் சரியான வழிமுறைகள் பின்பற்றப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. விளையாட்டு வீரர்களுக்கான தகுதி, திறமைகள் இருக்கும் பட்சத்தில் முதலமைச்சர் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுகிறது.
மதுரை மாநகராட்சி வரி முறைகேடு விவகாரத்தில் முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார்” என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.