“முதலீடுகளை ஈர்ப்பதில் முதலமைச்சர் தனிக் கவனம் செலுத்த வேண்டும்” – நயினார் நாகேந்திரன்!

முதலமைச்சர் விஜய் புதிய முதலீடுகளை ஈர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டுமென நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “தற்போதைய 2025-2026 ஆம் ஆண்டிற்கான அதிக புதிய முதலீடுகளை ஈர்த்த TOP 10 மாநிலங்களின் பட்டியலில், தமிழகம் 10 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள ஊடகச் செய்தி கடும் அதிர்ச்சியளிக்கிறது. நமது மாநிலத்தின் தொழில் முதலீடுகள் எந்தளவிற்கு நலிவடைந்துள்ளன என்பதற்கான சான்றாக விளங்கும் இந்த தகவலை, தற்போதைய தவெக அரசாவது சற்று தீவிரமாகக் கையாள வேண்டும்.

“ஒரு காலத்தில் நாங்கள் இப்படி இருந்தோம், அப்படி இருந்தோம்” என்ற கடந்த கால வெற்றியையே பேசிக் கொண்டிருந்தால், நிகழ்கால வளர்ச்சியும் எதிர்கால லட்சியமும் கேள்விக்குறியாகிவிடும் என்பதைத் தான் தமிழக பாஜக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. புதிய தொழில் முதலீடுகளுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தாமல், பழங்கதைகளைப் பேசியும், வெற்று பேப்பரில் மட்டுமே பதிவாகிய புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் மட்டுமே வைத்து, தங்களது ஐந்து ஆண்டுகளையும் ஒப்பேற்றி விட்டது திமுக. அதன் விளைவால் தான், புதிய முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் சோடை போயுள்ளது. பெரிய பெரிய நிறுவனங்களும் பிற மாநிலங்களை நோக்கி படையெடுக்கின்றனர்.

எனவே, முந்தைய திமுக ஆட்சியில் இருந்தாவது தற்போதைய தவெக அரசு பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். பரந்தூர் விமான நிலையம் உள்ளிட்ட மத்திய அரசின் வளர்ச்சித் திட்டங்களை கண்ணை மூடிக் கொண்டு எதிர்க்கும் போக்கை கைவிட வேண்டும்! இணைப்பு வசதிகள், உட்கட்டமைப்பு வசதிகள், கடன் வசதிகள், மானியங்கள், சட்ட அனுமதிகள் ஆகியவற்றை எளிதாக்கி, மேம்படுத்தி புதிய முதலீடுகளை ஈர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டுமென முதல்வர் ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.