மக்களுக்கு பயன் தரும் திட்டங்களை முதலமைச்சர் எப்போதும் புறக்கணிப்பதில்லை என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை மண்ணடியில் உள்ள தனியார் பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாமை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ஆகியோர் தொடங்கி வைத்தனர். அப்போது பேசிய அமைச்சர் சேகர்பாபு, சென்னையில் மாமன்ற உறுப்பினர்களின் பரிந்துரைகளை ஏற்று கட்சி வேறுபாடின்றி நிதி ஒதுக்கப்படும் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தாலிக்கு தங்கம் திட்டம் நிறுத்தப்படதாக பட்ஜெட்டில் எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை. கட்சி வேறுபாடு பார்க்காமல் மக்களுக்கு பயன் தரும் திட்டங்களை எப்போதும் புறக்கணிக்காதவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் என்று பேசிய அவர், அதற்கு அம்மா உணவகம் , மாநகராட்சி நிதியுதவியுடன் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டி பேசினார்.







