ரஷ்ய-உக்ரைன் போரில் உயிரிழந்த மாணவரின் உடலை மருத்துவ கல்லூரி ஒன்றிற்கு தானம் செய்ய உள்ளதாக அவரின் தந்தை கூறியுள்ளார்.
ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையே கடந்த பிப்ரவரியில் இருந்து போர் நடந்து வருகிறது. இதில் ராணுவத்தினர், பொதுமக்கள் பலர் பலியாகியுள்ளனர். இந்தியா உட்பட பல நாடுகளில் இருந்து மாணவர்கள் உக்ரைனில் மருத்துவம் பயின்று வருகின்றனர். போர் தொடங்கிய பின், இந்திய மாணவர்கள் தாயகம் திரும்புவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக பல மாணவர்கள் பாதுகாப்பாக நாடு திரும்பியுள்ளனர்.
உக்ரைனின் கார்கீவ் மருத்துவ கல்லூரியில் 4-ம் ஆண்டு பயின்று வந்த கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மாணவர் நவீன், மார்ச் 1-ம் தேதி பொருட்கள் வாங்குவதற்கு வெளியே சென்றபோது நடந்த தாக்குதலில் பலியானார். இந்த போரில் உயிரிழந்த முதல் இந்தியர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. அங்கு போர் பதற்றம் நீடித்து வருவதால் அவரது உடலை தாயகம் கொண்டுவருவதில் சிக்கல் நீடித்தது.
இந்நிலையில், அவரது உடல் நாளை அதிகாலை 3 மணிக்கு பெங்களூரு வந்தடையும் என கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நவீனின் தந்தை, அவரது உடலை பெங்களூருவில் இருக்கும் ஒரு மருத்துவ கல்லூரிக்கு தானம் அளிக்க இருப்பதாக தெரிவித்தார். மேலும் பேசிய அவர், “என் மகன் மருத்துவம் பயின்று சேவை செய்ய வேண்டும் என்று விரும்பினான். இப்போது அவனின் உடல் மருத்துவ மாணவர்களின் ஆராய்ச்சிக்கு உதவட்டும்” எனக் கூறினார். நவீனின் உடல் பெங்களூரு வந்தடைந்ததும், அவரின் சொந்த ஊரான ஹவேரிக்கு எடுத்து செல்லப்பட இருக்கிறது. அதன் பிறகு, சடங்குகள் முடிந்ததும், அவரின் உடல் தானம் அளிக்கப்படவுள்ளது.
உயிரிழந்த மாணவரின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் காசோலையளித்த முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, அவரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை அளிக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.







