கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் விசாரணை அறிக்கை அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
பள்ளி மீது தவறு இருப்பின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று ஏற்கனவே தெரிவித்த நிலையில், விசாரணை நடத்த ஆணை பிறப்பித்துள்ளது மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரிலுள்ள சக்தி மேல்நிலைப் பள்ளியில் +2 மாணவி ஸ்ரீமதி கடந்த சில தினங்களுக்கு முன் உயிரிழந்தார். மகளின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகவும், நீதி விசாரணை தேவை என்றும் கோரி பெற்றோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், பள்ளி நிர்வாகத்துக்கு சீல் வைக்க வேண்டும் என்றும் உயிரிழந்த மாணவி மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி இளைஞர்கள் திரண்டு இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில் பலர் காயமடைந்தனர்.
ஒருகட்டத்தில் போலீஸார் பின்வாங்க போராட்டக்காரர்கள் அந்தப் பள்ளிக்குள் நுழைந்து சூறையாடினார். பள்ளி வளாகத்தில் இருந்த பேருந்துகளுக்கும் தீவைத்தனர். அங்கிருந்த உடைமைகளையும் வீசி எறிந்தும், எரித்தும் போராட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே, மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை கோரிய வழக்கு நாளை நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணை வரவுள்ளது.
மரணத்தில் சந்தேகம் உள்ளதால் தங்கள் தரப்பு மருத்துவர்கள் கொண்டு
மறு பிரேத பரிசோதனை நடத்த வேண்டும் மாணவி தந்தை ராமலிங்கம் வழக்கு தாக்கல் செய்துள்ளார். பிரேத பரிசோதனை வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. முறையான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனை அறிக்கையை நாளை நீதிமன்றத்தில் காவல் துறை தாக்கல் செய்கிறது.