“நெல் தேங்குவதற்கு மத்திய அரசே காரணம்” – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுக்கு அமைச்சர் சக்கரபாணி பதில்!

செறிவூட்டப்பட்ட அரிசிக்கு மத்திய அரசு அனுமதி அளித்துவிட்டால் நெல் தேங்கும் நிலை இருக்காது என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டசபையின் 4-ம் நாள் கூட்டம் இன்று காலை கூடியது. கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, நெல் கொள்முதல் நிலையங்களில் ஒரு லட்சம் நெல் மூட்டைகள் தேங்கி கிடப்பதாக குற்றம்சாட்டினார். இதற்கு அமைச்சர் சக்கரபாணி பதில் அளித்தார். அப்போது பேசியவர்,

“நெல் கொள்முதல் நிலையங்களிலிருந்து 4,000 லாரிகள், 10 ரயில்வே வேகன்கள் மூலம் நெல் மூட்டைகள் கொண்டு செல்லப்படுகிறது. அதேபோல், ஞாயிற்றுக்கிழமைகளிலும் தொடர்ந்து நெல் கொள்முதல் செய்யப்படும் நிலையில் நாள் ஒன்றுக்கு தலா 1000 மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுகிறது.

செறிவூட்டப்பட்ட அரிசிக்கு தற்போது வரை மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை, உடனே அனுமதி வாங்கி தாருங்கள். செறிவூட்டப்பட்ட அரிசிக்கு மத்திய அரசு அனுமதி அளித்துவிட்டால் நெல் தேங்கும் நிலை இருக்காது என்று கூறினார். மேலும் பேசியவர், நெல் அதிகமாக விளையும் இடத்தில் 2,000 முதல் 3,000 மூட்டைகள் வரை நெல் கொள்முதல் செய்கிறோம். நெல் தேங்குவதற்கு மத்திய அரசே காரணம். நெல்லின் ஈரப்பதத்தை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு ஏற்கவில்லை. இதனால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 13 மடங்கு நெல் உற்பத்தி அதிகரித்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.