இன்று கூடுகிறது காவிரி நீர் ஒழுங்காற்று குழு! – காவிரி நீர் திறப்பு குறித்து ஆலோசிக்க வாய்ப்பு!

காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் 147-வது கூட்டம் இன்று காலை 11:30 மணிக்கு டெல்லியில் நடைபெறுகிறது.

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே காவிரி நீர் பங்கீடு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆகியவை அவ்வப்போது கூடி வழிகாட்டுதல்களை வழங்கி வருகின்றன. காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய நீர் முழுமையாக வழங்கப்படாத நிலையில், தமிழ்நாடு அரசு இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

கடந்த நவம்பர் 6-ஆம் தேதி நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் 61-வது கூட்டத்தில், காவிரியில் இருந்து தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு 3,000 கன அடி நீர் திறந்துவிட வேண்டும் என கர்நாடக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் 147-வது கூட்டம் அதன் தலைவர் வினித் குப்தா தலைமையில் இன்று காலை 11:30 மணிக்கு டெல்லியில் நடைபெறுகிறது.

இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் நீர்வளத் துறை அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். இன்றைய கூட்டத்தில் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு அடுத்த 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிடுவது தொடர்பாக விவாதிக்கப்படவுள்ளது.

இதனைத் தொடர்ந்து, வரும் 25-ஆம் தேதி காவிரி நீர் மேலாண்மை ஆணையம் கூடவுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.