அமெரிக்க சைபர் இயக்குநர் பதவி நீக்கம்.. டிரம்ப் அதிரடி!

அமெரிக்காவில் விமானப் போக்குவரத்து, வங்கிச் சேவைகள் மற்றும் தேசியப் பாதுகாப்பு அமைப்புகளில் தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, தேசிய சைபர் இயக்குநர் சீன் கெய்ராஸ்கிராஸை அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாகப் பதவி நீக்கம் செய்துள்ளார்.

அமெரிக்காவின் தேசிய சைபர் இயக்குநராகப் பணியாற்றி வந்த சீன் கெய்ராஸ்கிராஸ் (Sean Cairncross), நவம்பர் 19 – வியாழக்கிழமை தனது பதவியிலிருந்து நீக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க மத்திய அரசின் பல்வேறு துறைகளில் இணையப் பாதுகாப்பு தொடர்பான கொள்கைகள் மற்றும் உத்திகளை மேற்பார்வையிட்டு வந்தவர் சீன் கெய்ராஸ்கிராஸ். அவரது பதவி நீக்கத்தைத் தொடர்ந்து, பாதுகாப்புத் துறையின் தலைமைத் தகவல் அதிகாரியான கிர்ஸ்டன் டேவிஸ் (Kirsten Davies) தற்காலிகமாக அந்தப் பொறுப்பைக் கவனிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்தடுத்து ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகள்

கடந்த ஒரு வாரமாக அமெரிக்காவில் பல்வேறு தொழில்நுட்பக் கோளாறுகள் தொடர்ந்து ஏற்பட்டு வருகின்றன. இதனால் நாடு முழுவதும் விமானப் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் சேவையில் ஏற்பட்ட கோளாறால் மின்னஞ்சல் சேவைகளும் பாதிக்கப்பட்டன. அதேபோல், அமெரிக்க தேசியப் பாதுகாப்பு முகமையின் (NSA) நெட்வொர்க் சேவையிலும் தற்காலிகத் தடங்கல் ஏற்பட்டது. அடுத்தடுத்து ஏற்பட்ட இந்தப் பாதிப்புகளைக் கையாள்வதில் டிரம்ப் நிர்வாகம் முறையாகச் செயல்படவில்லை என விமர்சனங்கள் எழுந்தன.

இதற்கிடையே, கடந்த வாரம் முக்கியமான சேவைகளில் ஏற்பட்ட பாதிப்புகள் அனைத்தும் தனித்தனியான சேவைத் தடங்கல்கள் என்றும், அவை பராமரிப்புப் பணிகள் மற்றும் தொழில்நுட்ப மாற்றங்களால் ஏற்பட்டவை என்றும் அமெரிக்காவின் உயர்மட்ட உளவுத்துறை அதிகாரி நவம்பர் 18 – புதன்கிழமை தெரிவித்துள்ளார். மேலும், இவை ஒருங்கிணைக்கப்பட்ட தாக்குதலோ அல்லது வெளிநாட்டு அரசால் நடத்தப்பட்ட சைபர் தாக்குதலோ அல்ல என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.

புதிய இயக்குநருக்கு செனட் ஒப்புதல் அவசியம்

சீன் கெய்ராஸ்கிராஸ், தேசிய சைபர் இயக்குநர் பொறுப்பை ஏற்கும் முன்பு குடியரசுக் கட்சியின் தேசியக் குழுவில் (Republican National Committee) நிர்வாகியாகப் பணியாற்றியவர். அவருக்குப் பதிலாக நியமிக்கப்படும் புதிய இயக்குநர் அமெரிக்க செனட் சபையின் ஒப்புதலைப் பெற வேண்டும். ஜனவரி மாதம் முதல் அமெரிக்க செனட் சபை ஜனநாயகக் கட்சியினரின் கட்டுப்பாட்டில் வரவுள்ள நிலையில், புதிய இயக்குநரை நியமிப்பதில் அரசியல் முக்கியத்துவம் ஏற்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.