“தமிழ்நாடு விவசாயிகளின் உரிமைகளை பாஜக அரசு புறக்கணித்துள்ளது!” – அண்ணாமலை

கர்நாடகாவில் தேர்தல் ஆதாயங்களைப் பெற தமிழக விவசாயிகளின் உரிமைகளை பாஜக அரசு புறக்கணித்துள்ளது என்று அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, “காவிரி ஆற்றின் குறுக்கே எந்தவொரு கட்டுமானத்தையும் மேற்கொள்ள கர்நாடக அரசு, மற்ற மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஆகியவற்றின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்று 16.02.2018 தேதியிட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் எங்கும் குறிப்பிடப்படவில்லை என்று ஜல் சக்தி அமைச்சகம் நேற்று மாநிலங்களவையில் தெரிவித்துள்ளது.

கர்நாடகாவில் தேர்தல் ஆதாயங்களைப் பெறுவதற்காக, தமிழ்நாடு விவசாயிகளின் உரிமைகளை பாஜக தலைமையிலான மத்திய அரசு கருத்தில் கொள்ளாமல் புறக்கணித்துள்ளது என்பதையே இந்த அறிக்கை வெளிப்படுத்துகிறது.

இங்கு நான் ஒன்றைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்: 2021-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி, அப்போதைய மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் அவர்கள் நாடாளுமன்றத்தில் பேசுகையில், விரிவான திட்ட அறிக்கையைத் (DPR) தயாரிக்க கர்நாடக அரசுக்கு அளிக்கப்பட்ட அனுமதி நிபந்தனைக்கு உட்பட்டது என்றும், மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர்ச் சட்டம் மற்றும் நடைமுறைகளின்படி, மாநிலங்களுக்கு இடையே அமையும் ஒரு அணையைக் கட்டுவதற்கு, ஆற்றின் கீழ்மட்டத்தில் உள்ள மாநிலங்களின் (இவ்வழக்கில் தமிழ்நாடு) அனுமதி பெறுவது கட்டாயம் என்றும் கூறியிருந்தார்.

ஏற்கனவே தான் எடுத்த நிலைப்பாட்டில் இருந்து மத்திய அரசு இப்போது திடீரென ஏன் பின்வாங்கியுள்ளது? விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மாற்றியமைக்கக்கூடிய முடிவுகளிலாவது ஒரு நிலையான அணுகுமுறையை எதிர்பார்ப்பது அதிகப்படியான கோரிக்கையா?

தமிழ்நாட்டு மக்களை அலட்சியப்படுத்த வேண்டாம் என்றும், தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய இரு நட்பு மாநிலங்களுக்கு இடையிலான சகோதரத்துவ உறவை தேவையற்ற வகையில் சிதைக்க வேண்டாம் என்றும் மத்திய அரசை வலியுறுத்துகிறேன்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.