பெரியாருக்கும், அண்ணாவிற்கும் இடையே கம்பீரமாக நிற்பது தான் கலைஞருக்கு சிறப்பு என வைரமுத்து கூறினார்.
சென்னை ஒமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியின் சிலையை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு திறந்துவைத்தார். அதன்பிறகு கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்வில் குடியரசு துணைத் தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், திமுகவின் தோழமைக் கட்சித் தலைவர்கள், நடிகர்கள் ரஜினிகாந்த், சத்யராஜ், கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கவிஞர் வைரமுத்து கருணாநிதி சிலையை பார்வையிட்டு புகைப்படம் எடுத்துக்கொண்டர். அருகில் வைக்கப்பட்டுள்ள திருவுறுபடத்திற்கு மலர் தூவி மரியாதையும் செலுத்தினார். பின்னர், கவிஞர் வைரமுத்து நியூஸ் 7 தமிழுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், கலைஞரின் பெயர் உருவச்சிலை கம்பீரமாகவும் கலை நயமிக்கதாகவும் திகழ்கிறது.
ரஷ்யாவுக்கு நான் செல்லும் போதெல்லாம் அங்கு அமைந்துள்ள சிலைகளைக் கண்டு மலைப்பேன். அங்குள்ள சிலைகளின் குணாதிசயம் கொள்கை வெளிப்படும். அப்படி ஒரு பாவம் கொள்கைப் பிடிப்பு ஐவிரல் காட்டும் அழகு இந்த சிலையில் அமைந்து இருக்கிறது.
இந்த இடத்தை தேர்ந்தெடுத்த தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஸ்டாலினை பாராட்டுகிறேன். தலைவருக்கு எது நல்ல இடம் என்பதை அவர் கண்டறிந்திருக்கிறார். பெரியாருக்கும் அண்ணாவிற்கும் மத்தியில் கம்பீரமாக திகழ்வது தான் கலைஞரின் வரலாறு. இந்தச் சிலை ஒரு கலை, தமிழ்நாட்டின் நிலை, எதிர்காலத்தில் தமிழர்களுக்கு யாத்திரை தலமாக திகழும் என்று கூறினார்.