மாநிலங்களவை தேர்தலில் பாஜக உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
1990-ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சி மாநிலங்களவையில் 108 உறுப்பினர்களைக் கொண்டிருந்தது. கடந்த 2014ம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்தபோது மாநிலங்களவையில் பாஜகவின் பலம் 55 ஆக இருந்தது. பின்னர் படிப்படியாக உயர்ந்து 97 ஆக அதிகரித்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பஞ்சாப், அசாம், திரிபுரா, நாகாலாந்து, இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் காலியாகும் 13 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு சமீபத்தில் தேர்தல் நடைபெற்றது.
இதில், நாகாலாந்து, இமாச்சல பிரதேசத்தில் தலா ஒரு உறுப்பினர் பதவியை போட்டியின்றி பாஜக கைப்பற்றியது. ஏப்ரல் மாதத்தில் நடந்த தேர்தலில், அசாமில் 2 உறுப்பினர், திரிபுராவில் ஒரு உறுப்பினர் பதவியை வென்றது. இதனால் மாநிலங்களவையில் பாஜக பலம் 100 ஆக உயர்ந்தது.
இந்த நிலையில், ஜூன் 10-ம் தேதி மீண்டும் மாநிலங்களவை தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் 57 இடங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதில் 24 இடங்கள் பாஜக வசம் உள்ளது. சத்தீஸ்கர், ராஜஸ்தான், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாஜக ஆட்சி நடைபெறாத சூழ்நிலையில் அக்கட்சிக்கு மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது.
ராஜஸ்தானில் சுயேச்சைகளின் ஆதரவில், 3 இடங்களை கைப்பற்றும் என, காங்கிரஸ் எதிர்பார்க்கிறது. அங்கு தற்போது தேர்தல் நடைபெற உள்ள 4 எம்.பி.க்கள் இடங்களும் பாஜக வசம் உள்ளன. எம்எல்ஏக்கள் எண்ணிக்கை குறைந்ததால் சத்தீஸ்கர், ஜார்கண்ட் மற்றும் மகாராஷ்டிராவில் பாஜக தலா ஒரு இடத்தை இழக்கும் எனத் தெரிகிறது.
எனினும் பாஜக 100 என்ற எண்ணிக்கையை இழப்பதால் பெரிய அளவில் கவலைப்படவில்லை. பாஜகவின் கூட்டணிக் கட்சிகளான அதிமுக, ஐக்கிய ஜனதாதளம் மற்றும் ஆதரவு நிலைப்பாடு கொண்ட கட்சிகளான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மற்றும் பிஜு ஜனதா தளம் ஆகியவற்றின் ஆதரவும் பாஜகவிற்கு உள்ளது.
இதுகுறித்து மத்திய இணை அமைச்சர் வி. முரளீதரன் கூறுகையில், “நாங்கள் தற்போது மாநிலங்களவையில் கணிசமான எண்ணிக்கையை கொண்ட உறுப்பினர்களை கொண்டு இருக்கிறோம். முக்கிய மசோதாக்களை தடுக்க நினைக்கும் எதிர்க்கட்சிகளின் முயற்சிகள் வெற்றியடையாது” என்று கூறினார்.