மத்திய நிதிநிலை அறிக்கையில் ரயில்வே துறைக்கான அறிவிப்புகள் நிலுவையில் இருக்கும் திட்டங்களையும், பயணிகளின் பயண அனுபவத்தையும் மேம்படுத்தும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் கூறியுள்ளார்.
2022-23ம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். இந்நிலையில் மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். மத்திய பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள ரயில்வே துறைக்கான ரூ. 1. 37 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு ரயில்வே துறையை மேம்படுத்த பெரிதும் உதவும். கிடப்பில் இருக்கும் பல்வேறு ரயில்வே திட்டங்களையும் நிறைவு செய்துவிடலாம் என்றார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும் பேசிய அவர், மத்திய அரசின் வந்தே பாரத் மற்றும் கவாச் ரயில் குறித்த அறிவிப்புகள் மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. 2000 கிலோமீட்டர் ரயில்வே நெட்வொர்க்கை கவாச் ரயில் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்படும் என்ற அறிவிப்பு பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்தும். உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதன் மூலம் திட்டத்தில் எந்த சிக்கலும் இருக்காது என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ரயில்வே திட்டங்கள் குறித்த அறிவிப்புகளுக்கு பிரதமர் மோடிக்கு நான் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் நிதியமைச்சரின் அறிவிப்புகள் அனைத்தும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதாக உள்ளது. சிறு குறு விவசாயிகள், தொழில் முனைவோர்கள் மற்றும் சாமானிய மக்களுக்கு பயனுள்ளதாக உள்ளதென பேசிய அவர், அடுத்த 3 ஆண்டுகளில் வந்தே பாரத் திட்டத்தில் கீழ் 400 ரயில்கள் கொண்டுவரப்படும் என்ற அறிவிப்பு சாமானியர்களின் பயணத்தை அடுத்த தளத்திற்கு கொண்டு செல்லும் என்று மகிழ்ச்சி தெரிவித்தார்.