கடலூர் அருகே தென்னம்பாக்கம் அழகுமுத்து அய்யனார் கோயில் சித்திரை திருவிழா கோலகலமாக நடைபெற்றது. இதில் 108 நாதஸ்வரம், தவில் வாத்தியங்களுடன் அழகுமுத்து அய்யனாருக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.
கடலுார் அருகே, தென்னம்பாக்கம் கிராமத்தில் உள்ள அழகுமுத்து அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலின் பின்புறத்தில் அழகர் சித்தர் ஜலசமாகி அடைந்த கிணறு சிறப்பு வாய்ந்தது. இக்கோவிலில் ஆண்டுதோறும் திருவிழா உற்சவம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டுக்கான விழா நேற்று நடைபெற்றது. இதில் நேற்று காலை மலட்டாற்றிலிருந்து காவடியும், கரகமும் பொன்னி அம்மன் கோவிலில் மேள, தாளம் முழங்க ஊர்வலமாகவும், மாலையில் வேடம் சாத்தான் கோவிலிருந்து கரகம் ஊர்வலமாகவும் புறப்பட்டு வந்தடைந்தது.
அழகுமுத்து அய்யனார், அழகர் சித்தர், பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதனை தொடர்ந்து ஆற்றில் அழகர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதன் பின்னர் ஒரே நேரத்தில் 108 நாதஸ்வரம், தவில் இசைக்கலைஞர்கள் வாத்தியங்களை இசைக்க பூரணி பொற்கலை அம்மன் சமேத அழகருக்கு திருக்கல்யாணம் விமர்சையாக நடைபெற்றது.
இதனை பக்தர்கள் பரவசத்துடன் பார்த்து தரிசித்தனர். இந்த விழாவில் கடலுார், புதுச்சேரி, விழுப்புரம், போன்ற பல்வேறு மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தும் விதமாக கோவிலில் பொம்மைகள் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், விழாக்குழுவினர், கிராம பொதுமக்கள் செய்தனர்.
—அனகா காளமேகன்







