தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ண ராஜின் அதிரடி நடவடிக்கையால், 500க்கும் மேற்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ண ராஜின் அதிரடி நடவடிக்கையால், இந்த ஆண்டில் இதுவரை 66 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து, காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்த ஆண்டில் இதுவரை சட்டவிரோதமாகக் கஞ்சா விற்பனை செய்ததாக 79 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு,106 நபர்கள் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 49.6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அண்மைச் செய்தி: ‘கடன் தொல்லை; பழனியில் உயிரை மாய்த்துக் கொண்ட கேரள தம்பதி’
தொடர் கஞ்சா விற்பனை செய்ததாக இதுவரை 14 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், கஞ்சா விற்பனை செய்தவர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் உட்பட 37 நபர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் இதுவரை சட்டவிரோதமாக குட்கா விற்பனை செய்ததாக 409 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 429 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
மேலும், அவர்களிடமிருந்து 2340 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு புகையிலை பொருட்கள் விற்பனை செய்தவர்களின் கடைகளுக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளின் மூலம் 2,95,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 49 கடைகளுக்குச் சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்டத்தில் கஞ்சா குட்கா விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.








