புதுக்கோட்டை ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து சென்றனர்.
புதுக்கோட்டை நகர் பகுதியான கீழ நான்காம் வீதியில் வடபுறம் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா நடத்தப்பட்டது. இந்த குடமுழுக்கு விழாவில், கோயில் எதிரே யாகசாலை அமைக்கப்பட்டு கடந்த மூன்று நாட்களாக பல்வேறு முக்கிய ஸ்தலங்களில் இருந்து எடுத்துவரப்பட்ட புனித நீர் குடத்தினை யாக சாலையில் வைத்து சிவாச்சாரியார்கள் ஆறு கால பூஜை செய்தனர்.
இதனை அடுத்து 3 நாட்கள் வைத்து பூஜை செய்யப்பட்ட புனித நீர் குடத்தினை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்தவாறு மேள தாளங்கள் முழங்க கோயிலைச் சுற்றி வந்து, பின்னர் கோயில் கும்பத்தில் உள்ள கலசத்தில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்து பின்னர் தீபராதனை காண்பிக்கப்பட்டது.
இந்த குடமுழுக்கு விழாவினைக் காண, புதுக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்திருந்து கும்பாபிஷேகத்தைக் கண்டு களித்து சாமி தரிசனம் செய்து சென்றனர்.
சௌம்யா.மோ






