அரசாங்கத்துக்குச் சொந்தமான கணினி, செல்போன் போன்ற சாதனங்களில் டெலிகிராம் செயலியை பயன்படுத்த உக்ரைன் அரசு தடை விதித்துள்ளது.
உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் சுமார் 3 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி சிறப்பு ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷ்யா தனது தாக்குதல்களை நடத்தியது. ரஷ்யாவின் தொடர் தாக்குதல்களால் உக்ரைனில் உயிர் மற்றும் உடைமை இழப்புகள் தொடர்ந்து அதிகரித்தன. ஆரம்பத்தில் ரஷ்ய அதிபர் புதினின் படைகள் ஆக்ரோஷமாக இருந்தன. பின்னர் ஜெலன்ஸ்கியின் ராணுவமும் மேற்கத்திய ஆயுதங்களின் உதவியுடன் எதிர் தாக்குதல்களை நடத்தி ரஷ்யாவை அதிர வைத்தது.
இந்த போரில், முக்கிய நகரங்களின் மீது இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த நிலையில் சைபர் தாக்குதலுக்கு காரணமாக இருப்பதாக டெலிகிராம் செயலி மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்த செயலி மூலம் பயனர்களின் ரகசிய தகவல்களை எதிரி நாடுகள் திருடுவதாகவும் உக்ரைன் ராணுவ புலனாய்வு துறை தெரிவித்தது.

இதனையடுத்து, அரசாங்கத்துக்குச் சொந்தமான கணினி, செல்போன் போன்ற சாதனங்களில் டெலிகிராம் செயலியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, அரசு மற்றும் ராணுவப் பணியாளர்கள், பாதுகாப்புத் துறை மற்றும் முக்கியமான உள்கட்டமைப்பு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வ சாதனங்களில் டெலிகிராம் செயலியை பயன்படுத்த உக்ரைன் அரசு தடை விதித்துள்ளது.







