மதுரையில் உயிரிழந்த ஜல்லிக்கட்டு காளைக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்

மதுரையில் உயிரிழந்த ஜல்லிக்கட்டு காளைக்கு அப்பகுதி மக்கள் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டி, இறுதிச் சடங்கு செய்து  அடக்கம் செய்தனர். மதுரை பெரியார் பேருந்து நிலையம் திடீர் நகர் பகுதியில் உள்ள தேவி ஸ்ரீ…

மதுரையில் உயிரிழந்த ஜல்லிக்கட்டு காளைக்கு அப்பகுதி மக்கள் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டி, இறுதிச் சடங்கு செய்து  அடக்கம் செய்தனர்.

மதுரை பெரியார் பேருந்து நிலையம் திடீர் நகர் பகுதியில் உள்ள தேவி ஸ்ரீ கருமாரியம்மன் கோவிலுக்குச் சொந்தமான இந்த ஜல்லிக்கட்டு காளைக்கு ‘மருது’ என பெயரிட்டு கடந்த ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக வளர்த்து வந்துள்ளனர். இந்த காளை மதுரை மாவட்டத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு, கரடிக்கல் ஜல்லிக்கட்டு போட்டிகளிலும், தேனி மாவட்டம் பல்லவராயன் பட்டி ஜல்லிக்கட்டு, திண்டுக்கல் மாவட்ட ஜல்லிக்கட்டு போட்டிகளிலும் கலந்துகொண்டு பல்வேறு பரிசுகளைப் பெற்றுள்ளது.

இந்நிலையில், உடல்நலக் குறைவால் காளை மருது நேற்று திடீரென உயிரிழந்துள்ளது. இதையடுத்து, அப்பகுதி மக்கள் இறந்த காளைக்கு பால், இளநீர், மஞ்சள் போன்ற பொருள்களால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மஞ்சள் கலந்த தண்ணீர் மற்றும் பாலால் காளையின் காலை சுத்தம் செய்து, அதன் பின்னர் தலை, நெற்றி, கால் ஆகியவற்றில் சந்தனம், குங்குமம் வைத்து மரியாதை செய்து வழிபட்டனர்.

இதையடுத்து, உயிரிழந்த காளைக்கு இறுதிச்சடங்கு நடத்தப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. ஜல்லிக்கட்டு காளை மருது உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.