தமிழ்நாட்டில் வரும் 2026 தேர்தலில் பாமக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பல்லாவரத்தில் பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், திராவிட கட்சிகள் 54 ஆண்டுகள் ஆண்டது போதும் என்று மக்கள் நினைத்து விட்டனர். வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பாமக ஆட்சி தமிழகத்தில் நடைபெற வேண்டும். 101 விழுக்காடு பாமக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது என தெரிவித்தார்.
மேலும், 50 ஆண்டுகளுக்கு முன் 5 ஆயிரம் ஹெக்டர் இருந்த பள்ளிக்கரனை சதுப்பு நிலம் தற்போது 500 ஹெக்டராக ஆக்கிரமிப்பால் சுருங்கிவிட்டது. சென்னை அண்ணாமலைபுரத்தில் ஏழை மக்கள் 50 ஆண்டுகளாக வசித்துவிட்ட குடியிருப்புகளை இடித்து தள்ளப்பட்டது. ஆனால் இந்த பள்ளிகாரணை ஆக்கிரமிப்புகளை அகற்ற இந்த அரசுக்கு தைரியம் உண்டா? அவர்களை அங்கிருந்து அகற்றமுடியுமா? முடியாது ஏன் என்றால் அவர்கள் எல்லாம் ஏழைகள் இல்லை என குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், யார் யாரோ எதோ எதோ மாடல் சொல்லி வருகின்றனர். திராவிட மாடல் என்று சொல்லி வருகின்றனர். பள்ளி மாணவர் மதுபாட்டில்களை கையில் வைத்திருப்பது தான் திராவிட மாடல். ஆனால் நம்முடைய மாடல் பாட்டாளி மாடல். புகையில்லா, மது இல்லா தமிழகம் கொண்டு வருவதே பாட்டாளி மாடல் என கூறினார்.
இந்தமுறை திமுகவிற்கு மக்கள் வாய்ப்பு கொடுத்துவிட்டனர். அடுத்தமுறை திமுகவிற்கு மக்கள் வாய்ப்பு கொடுக்கமாட்டார்கள். திமுக எப்போதும் இரண்டவது முறை ஆட்சியை பிடித்தது இல்லை. எனவே திமுக ஆட்சிக்கு வராவிட்டால் அந்த இடம் பாமகவிற்கு தான். எனவே கடுமையாக உழைக்க வேண்டும். அடுத்தமுறை அதிமுகவோ, திமுகவோ அடுத்து ஆட்சிக்கு வரமுடியாது என தெரிவித்தார்.








