நாளை ஆசிரியர் கொண்டாடப்படுவதையொட்டி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் குடியரசுத் தலைவரும், முன்னாள் ஆசிரியருமான டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக செப்டம்பர் 5ம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் சிறந்த ஆசிரியர்களுக்கு மத்திய அரசு சார்பில் தேசிய நல்லாசிரியர் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படும்.
தங்களது அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பால் பள்ளிக் கல்வியின் தரத்தை மேம்படுத்தியது மட்டுமல்லாமல், மாணவர்களின் வாழ்வையும் வளமாக்கிய, நாட்டின் தலைசிறந்த ஆசிரியர்களின் தனித்துவம் வாய்ந்த பங்களிப்பை கொண்டாடுவது, கௌரவிப்பது ஆகியவை தேசிய ஆசிரியர் விருதின் நோக்கமாகும்.
இந்நிலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஆசிரியர்தின வாழ்த்துக்களை ஆசிரியர்களுக்கு தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் குறிப்பாகத் தமிழ்நாட்டின் ஆசிரியர்கள் அனைவருக்கும் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள். ஆசிரியர்களுக்கு மரியாதை செலுத்துவது நமது பண்டைய இந்தியப் பாரம்பரிய மரபாகும். ஆசிரியர்கள் சமூகத்திற்கு ஊக்கமளிக்கும் முன்மாதிரியாகத் திகழ்கின்றனர்.
சுதந்திர இந்தியாவின் அமுதப் பெருவிழாக் காலத்தின் அடுத்த 25 ஆண்டுகள் இந்தியாவின் விரிவான எழுச்சிக் காலமாகும். இத்தருணத்தில் தேசத்தைக் கட்டியெழுப்புவதில் ஆசிரியர்களின் பங்கு மிக முக்கியமானது என்று தெரிவித்துள்ளார்.







