மாநில அரசின் நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளதில் விதிமீறல் நடந்திருப்பதாக கலை ஆசிரியர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
இந்தியாவின் குடியரசுத் தலைவரும் , முன்னாள் ஆசிரியருமான ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக செப்டம்பர் 5ம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தநாளில் சிறந்த ஆசிரியர்களுக்கு மத்திய அரசு சார்பில் தேசிய நல்லாசிரியர் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படும். அதே போல் தமிழகத்தில் மாநில அளவில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதும் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 2021-22-ம் கல்வியாண்டுக்கான நல்லாசிரியர்களை தேர்வு செய்ய தேர்வுக் குழு அமைக்கப்பட்டது. மாவட்ட அளவிலான தேர்வு குழுக்கள் பரிந்துரைக்கும் நபர்களை மாநில அளவிலான தேர்வுக்குழு ஆய்வு செய்து பின்னர் விருது வழங்கப்படும். தற்போது மாநில அரசின் நல்லாசிரியர் விருதுக்கு 393 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், தேர்வானவர்களுக்கு நாளை பிற்பகல் சென்னையில் நடைபெறும் நிகழ்வில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் விருது வழங்க உள்ளதாகவும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. 
இந்நிலையில், நல்லாசிரியர் விருதுக்கு தேர்வான 393 பேரில் விதிகளுக்கு புறம்பாக கோவை மாவட்டத்தில், மாவட்ட தேர்வுக்குழுவில் உறுப்பினராக உள்ளவர் தனது பள்ளியைச் சேர்ந்த ஓவிய ஆசிரியர் ராஜேஸ்வரிக்கு விருது வழங்க பரிந்துரைத்துள்ளதாகவும், அவரின் பெயர் விருது பட்டியலில் இடம்பெற்றுள்ள நிலையில், அரசாணைக்கு புறம்பாக ஆசிரியர்கள் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், ஆசிரியர்கள் தேர்வில் விதிமீறல் நடந்திருப்பதாகவும் கலை ஆசிரியர்கள் நலச்சங்க தலைவர் ராஜ்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
திறமையானவர்களுக்கு விருது வழங்காமல், தேர்வுக்குழுவில் உள்ளவர்கள் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் விருது வழங்க பரிந்துரைப்பதாகவும், விருது பெற்றோர் பட்டியலில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்து விசாரிக்க, ஆணையம் அமைக்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறைக்கு கலை ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர்.







