‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்திற்கு மேற்கு வாங்க மாநிலத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தடை விதித்துள்ள நிலையில், அப்படத்திற்கு உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வரிவிலக்கு அளித்துள்ளார்.
இயக்குனர் சுதிப்டோ சென் இயக்கத்தில் கடந்த மே 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘தி கேரளா ஸ்டோரி’. இப்படம் கேரளாவை சேர்ந்த 32 ஆயிரம் இந்து இளம் பெண்களை மூளைச் சலவை செய்து மதம் மாற்றி ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர்த்ததாக சித்தரித்து எடுக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தை தடை செய்ய உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட மறுத்துவிட்டது. இந்த நிலையில், நீதிமன்றங்கள், விசாரணை அமைப்புகள் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகம் கூட நிராகரித்த ‘லவ் ஜிகாத்’ பிரச்னையை எழுப்புவதன் மூலம் மாநிலத்தை மத தீவிரவாதத்தின் மையமாக சித்தரிக்க சங்பரிவார் அமைப்புகள் பிரசாரத்தை கையிலெடுத்துள்ளது என, ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தின் தயாரிப்பாளர்களை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடுமையாக சாடினார்.
இதுதவிர இந்த படத்துக்கு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால் அசம்பாவிதங்களை தவிர்க்க தியேட்டர்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது. தமிழகத்தில் மால்களில் உள்ள திரையரங்குகளில் மட்டும் இப்படம் திரையிடப்பட்ட நிலையில், சென்னையில் திருமங்கலம் வி.ஆர் மால், ராயப்பேட்டை மால், சத்தியம் திரையரங்கம் உட்பட 6 திரையரங்குகளை முற்றுகையிட்டு இஸ்லாமிய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. இதையடுத்து படம் திரையிடப்பட்ட முதல் நாள் அன்றே படத்தின் அனைத்து காட்சிகளும் ரத்து செய்யப்படுவதாகவும், இனி திரையிடப்பட மாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டது. சட்ட ஒழுங்கு பிரச்சினை, படத்திற்கான வரவேற்பு இல்லாததால் திரையரங்க நிர்வாகங்கள் இந்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், “தி கேரளா ஸ்டோரி” படத்திற்கு மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தடை விதித்தும், நடிகை குஷ்பு ஆதரவு தெரிவித்தும் உள்ள நிலையில், உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தி கேரளா ஸ்டோரி படத்திற்கு வரிவிலக்கு அளித்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் ஹிந்தியில் பதிவிட்டு உறுதிப்படுத்தியுள்ளார்.
'The Kerala Story' उत्तर प्रदेश में टैक्स फ्री की जाएगी।
— Yogi Adityanath (@myogiadityanath) May 9, 2023
முன்னதாக மத்தியபிரதேசத்தில், அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் காணொலி ஒன்றை வெளியிட்டு, அதன் மூலம் ‛தி கேரளா ஸ்டோரி படத்திற்கு வரி விலக்கு அளித்து உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- பி.ஜேம்ஸ் லிசா









