தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  கோடைக் கால வெப்பம் படிப்படியாக தணிந்து வரும் நிலையில், தற்போது பல மாவட்டங்களில் அவ்வப்போது மழையும் பெய்து வருகிறது. நேற்று தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் மழை…

தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 கோடைக் கால வெப்பம் படிப்படியாக தணிந்து வரும் நிலையில், தற்போது பல மாவட்டங்களில் அவ்வப்போது மழையும் பெய்து வருகிறது. நேற்று தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் மழை பெய்ததால் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் இன்று  வெளியிட்ட செய்திக் குறிப்பில், இலங்கையின் மீது நிலை கொண்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனத்தின் காரணமாக நீலகிரி, சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திண்டுக்கல், திருவண்ணாமலை, விருதுநகர், ராமநாதபுரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

நாளை சேலம், விழுப்புரம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், மதுரை, ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் எனவும் அவ்வறிக்கை கூறுகிறது. 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.