மார்கண்டேய நதியின் குறுக்கே அணை: அமைச்சர் துரைமுருகன் அறிக்கை

கர்நாடக எல்லையில் அமைந்துள்ள முத்தியால்மடுகுவில் உற்பத்தியாகும் மார்கண்டேய நதியின் குறுக்கே அம்மாநில அரசு கட்டியுள்ள அணையால் தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி தாலுக்காவில் புஞ்சை பாசன வசதி பெறும் 870 ஹெக்டேர் பாதிக்கப்படும். இந்த விவகாரத்தில் ஒன்றிய…

கர்நாடக எல்லையில் அமைந்துள்ள முத்தியால்மடுகுவில் உற்பத்தியாகும் மார்கண்டேய நதியின் குறுக்கே அம்மாநில அரசு கட்டியுள்ள அணையால் தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி தாலுக்காவில் புஞ்சை பாசன வசதி பெறும் 870 ஹெக்டேர் பாதிக்கப்படும். இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசு தலையீட்டு தீர்வு காணவேண்டும் என நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, “மார்கண்டேய நதி அமைந்துள்ள பகுதியில் குடிநீர் தேவைக்காக 0.5 டிஎம்சி கொள்ளலவுள்ள ஒரு அணையை கட்டியிருப்பதாக கடந்த 2017-ம் ஆண்டு மத்திய நீர்வள குழுமத்தின் பொறியாளர்கள் ஆய்வு செய்தபோது கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.

இந்த அணை கடந்த 2019-ம் ஆண்டு அநேகமாக கட்டிமுடிக்ப்பட்டது. கர்நாடக அரசின் இச்செயலை தமிழ்நாடு அரசு தொடர்ந்து எதிர்த்து வந்துள்ளது. இதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கும், இடைக்கால மனு தாக்கல் செய்த பிறகு இப்பிரச்சனைக்கு தீர்வு காண ஒரு நடுவர் மன்ற குழு அமைக்கவேண்டும் என ஆணையிட்டது.

மார்க்கண்டேய நதியில் யார்கோல் பகுதியில் கட்டப்பட்டுள்ள அணை.

இந்த நடுவர் மன்ற குழுவை அமைக்க தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்திவருகிறது. கடந்த மாதம் மத்திய ஜல் சக்தி அமைச்சகத்துக்கு இதுதொடர்பாக கடிதம் மூலம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மார்கண்டேய நதியின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள நான்கு சிறு அணைகளினால் கிருஷ்ணகிரி தாலுக்காவில் புஞ்சை பாசன வசதி பெறும் சுமார் 870 ஹெக்டேர் பாதிக்கப்படும். இந்த விவகாரம் தொடர்பாக ஒன்றிய அரசு விரைவில் நடுவர் மன்றத்தை அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். நடுவர் மன்றத்தின் மூலம் இப்பிரச்சனைக்கு தீர்வு காணப்படும்’’ என தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.