தமிழகத்தில் இன்று 35 ஆயிரத்திற்கும் குறைவாக கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு 35 ஆயிரத்தைக் கடந்து பதிவாகி வந்தது. கொரோனாவைத் தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்த தமிழக அரசு, இறுதியாக ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கையும் அறிவித்துவிட்டது. இந்த நிலையில் சுகாதாரத் துறை இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பின்படி கொரோனா பாதிப்பு சற்று குறையத் தொடங்கியுள்ளது.
நேற்று 35 ஆயிரத்தைக் கடந்து கொரோனா பாதிப்பு பதிவான நிலையில் இன்று 34,867 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18,77,211 ஆக அதிகரித்துள்ளது. இதேபோல இன்று ஒரே நாளில் 27,026 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். மொத்த குணமானோர் எண்ணிக்கை 15,54,759 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவுக்கு இன்று மட்டும் 404 பேர் உயிரிழந்துள்ளனர், மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 20,872 ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் தற்போது சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 3,01,580 ஆக உள்ளது. சென்னையில் இன்று மட்டும் 4,985 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. கோவையில் 4277, செங்கல்பட்டில் 1899, ஈரோட்டில் 1467, கன்னியாகுமரியில் 1083, மதுரையில் 1453 பேருக்கு என பாதிப்பு பதிவாகியுள்ளது.







